அர்ச்சகர் நியமனத்தில் இனி பாலின பேதமும் கிடையாது- கே.பாலகிருஷ்ணன் பாராட்டு

 
balakrishnan

அர்ச்சகர் நியமனத்தில் இனி பாலின பேதமும் கிடையாது என்ற தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சாதனைக்கு சி.பி.ஐ(எம்) பாராட்டு தெரிவித்துள்ளது. 

balakrishnan

இதுதொடர்பாக சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர் நியமனத்தில் சாதிப் பாகுபாட்டிற்கு முடிவுகட்டும் நோக்கத்துடன் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர்’ திட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது அந்த திட்டத்தின் மூலம் 3 பெண்கள் அர்ச்சகர் கல்வியை முடித்து பணியில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் அர்ச்சகர் பணியில் நிலவி வந்த பாலின பேதத்திற்கும் முடிவுகட்டப்படும் என்ற செய்தி பெருமகிழ்ச்சி தருகிறது.

தமிழ்நாட்டில் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர்' ஆகலாம் என்ற உத்தரவு கடந்த 2006 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு பல்வேறு தடைகள் எழுந்தன. இந்த நிலையில் கேரளத்தில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர், பெண் அர்ச்சகர் நியமனங்கள் சாத்தியமாகின. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் நடைமுறைக்கு வரும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் நியமனம் பெற்று அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் முறியடிக்கப்பட்டன. இந்த நிலையில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்த ரம்யா, ரஞ்சிதா மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய பெண்கள் தேர்ச்சி பெற்று அர்ச்சகர் பயிற்சியை தொடங்கவுள்ள செய்தி வந்துள்ளது. மேலும், 15 பெண்கள் அர்ச்சகர் படிப்பில் ஆர்வத்துடன் சேர்ந்துள்ளனர் என்றும், இதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் ஏராளமான கோயில்களில் பெண் அர்ச்சகர்கள் பணியை தொடங்குவார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியும் வந்துள்ளது.

archagar

இதன் மூலம், அர்ச்சகர் பணியில் நிலவிவந்த சாதி வேறுபாடுகளோடு, பாலின பேதமும் அகலத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும். உறுதியோடு செயல்பட்டு இந்த மாற்றத்தை சாத்தியமாக்கியுள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கும், தமிழ் நாடு அரசிற்கும் சிபிஐ(எம்) மாநில செயற்குழு தனது பாராட்டுக்களை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டை முன்னோக்கிச் செலுத்தும் இதுபோன்ற புரட்சிகரமான மாற்றங்களை மக்கள் கொண்டாடி வரவேற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.