இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் யுஜிசி வரைவு வழிகாட்டுதலை திரும்ப பெறுக- கே.பாலகிருஷ்ணன்

 
balakrishnan

இறுதி வரைவு வழிகாட்டுதலில் இட ஒதுக்கீட்டை மறுதலிக்கும் அந்தப்பகுதியை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

K Balakrishnan - கே.பாலகிருஷ்ணன்


இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்கலைக்கழக மானியக்குழு சமூக நீதியை அடியோடு குழி தோண்டிப் புதைக்கும் வகையில் வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு குறித்த இறுதி வரைவு வழிகாட்டுதல் வன்மையான கண்டனத்திற்குரியது. அது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கம் போதுமானதல்ல. இறுதி வரைவு வழிகாட்டுதலில் இட ஒதுக்கீட்டை மறுதலிக்கும் அந்தப்பகுதியை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நேரடி நியமன பணியிடங்களில் உள்ள இட ஒதுக்கீடு நிலுவைக் காலி இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்றலாம் என யு.ஜி.சி நவம்பர் 2023இல் வெளியிட்ட இறுதி வரைவு இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரானது மட்டுமல்ல, சமூக நீதிக்கும் முற்றிலும் புறம்பானது.

பாஜக ஒன்றிய ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட தொடர்ந்து சதி செய்து வருகிறது. அச்சதியின் ஒரு பகுதியே யுஜிசி வெளியிட்டுள்ள இறுதி வரைவு ஆகும். ஏற்கனவே, பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு முறைக்கான அலகை ஒட்டு மொத்த பல்கலைக் கழகமாக இருந்ததை துறைவாரியாக மாற்றுகிற முடிவையும், அடுத்து கோவிட் முதல் அலை  காலத்தில் ஐ.ஐ.டிகளில் இட ஒதுக்கீட்டை சிதைக்கிற முயற்சியை டெல்லி ஐ.ஐ.டி இயக்குனர் ராம் கோபால் ராவ் தலைமையிலான குழு மூலமாகவும் செய்தது. கடுமையான எதிர்ப்பின் காரணமாக பின் வாங்கியது. மேலும்  2019 - ஒன்றிய அரசு உயர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் நியமன சட்டத்தை தொடர்ந்து மீறுகிற, அமலாக்க மறுக்கிற எந்த நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை.  இவையெல்லாம் ஒன்றிய அரசு, தான் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுகிறது என்பதன் வெளிப்பாடே. இதனால் ஆயிரக்கணக்கான நிலுவைக் காலியிடங்கள்  நிரப்பப்படாமல் இருக்கிற அநீதி அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.

K balakrishnan

இந்நிலையில், 2023 இறுதியில் யு.ஜி.சி வெளியிட்ட இறுதி வரைவு மூலம் மீண்டும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. அதன் 10வது பகுதி இட ஒதுக்கீட்டு உரிமையை அப்பட்டமாக மீறுகிறது. தற்போது கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு நேரடி நியமனங்களில் உள்ள நிலுவை காலியிடங்கள் "இட ஒதுக்கீடு விலக்கத்திற்கு" ஆளாகி பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்படாது என்ற விளக்கம் ஒன்றிய கல்வி அமைச்சகம், யு.ஜி.சி ஆகியவற்றின் ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விளக்கம் மட்டும் போதாது. எப்போது வேண்டுமானாலும் இட ஒதுக்கீட்டைப் பறிக்கலாம் என்கிற பாஜக அரசின் எண்ணத்தை நிறைவேற்றவே அது பயன்படும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலமே இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட துறை இடஒதுக்கீட்டை சீர்குலைக்கும் வகையில் அறிவிப்பை வெளியிடுவது சட்டவிரோதமானதாகும். எனவே, 2023 இறுதியில் யு.ஜி.சி  இறுதி வரைவின் குறிப்பிட்ட பகுதி (X) திரும்பப் பெறப்படுகிறது என்று அறிவிக்க வேண்டும். மேலும் உடனடியாக எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி நிலுவைக் காலியிடங்களை நிரப்ப சிறப்பு நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சிபிஐ (எம்) வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.