குறுவை பயிர் கருகி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்குக- கே.பாலகிருஷ்ணன்

 
balakrishnan

குறுவை பயிர் கருகி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35,000 இழப்பீடு வழங்க வேண்டுமென சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

K balakrishnan

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12ந் தேதி திறக்கப்பட்டது. உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் சுமார் 5 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். ஆனால், கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குரிய தண்ணீரை திறக்காத காரணத்தினால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. குறிப்பாக, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு பகுதியில் பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடகா மாத வாரியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடமும், காவிரி மேலாண்மை ஆணையத்திடமும் வற்புறுத்தியது. அதற்குரிய பலன் கிடைக்காத நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உச்சநீதிமன்றம் பயிர்கள் கருகி வரும் நிலையில் விரைந்து விசாரிப்பதற்கு பதிலாக செப்டம்பர் 21ந் தேதிக்கு ஒத்திவைத்திருப்பது பாதிப்பின் தீவிரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. எனவே, உச்சநீதிமன்றம் கருகும் பயிரை காப்பாற்றும் வகையில் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்.

K Balakrishnan - கே.பாலகிருஷ்ணன்

செப்டம்பர் மாதம் சம்பா சாகுபடி பணிகள் துவங்கி நடைபெற வேண்டும். ஆனால், தண்ணீர் உத்தரவாதமில்லாத நிலையில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை துவக்க தயக்கம் காட்டி வருகின்றனர். குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டு, சம்பா சாகுபடியும் இந்த ஆண்டு இல்லையென்றால் விவசாயிகள் மட்டுமல்லாமல் டெல்டா மாவட்ட பொருளாதாராமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், காவிரி படுகைப் பாதுகாப்பு கூட்டு இயக்கம் செப்டம்பர் 20ந் தேதி காவிரி டெல்டா மாவட்டம் முழுவதும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபடுவதென்று அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது முழுமையான ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பற்றாக்குறை கால பகிர்வு அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.  தமிழ்நாடு அரசு குறுவை பயிர் கருகி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35,000 இழப்பீடு வழங்கி விவசாயிகளை பாதுகாக்க முன்வரவேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.