வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைப்பு - அண்ணாமலை கண்டனம்!

 
annamalai mkstalin

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தாமான இடங்களில் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை திமுகவினர் உடைத்த சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  செந்தில் பாலாஜி வீடு,  அவரது சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ,கரூர் , பெங்களூரு , ஹைதராபாத் உள்ளிட்ட  இடங்களில் சோதனை நடைபெற்ற வரும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில் கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனையிட வந்த வருமானவரித்துறை பெண் அதிகாரியை ஐடி கார்டை காட்டுங்கள் என்று கூறி பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் வருமானவரித்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். 


இந்த நிலையில், சோதனைக்காக சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை திமுகவினர் உடைத்த சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வேலை வாய்ப்பு மோசடி தொடர்பாக சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளின் கார்களை திமுக குண்டர்கள் சேதப்படுத்தியுள்ளனர். பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் நாம் 60களில் வாழவில்லை என்பதை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.