#JUSTIN செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு ஆக.20க்கு ஒத்திவைப்பு..
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு மீதான விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருடைய காவல் நீட்டிக்கப்பட்டுவரும் நிலையில், பலமுறை ஜாமின் கோரி அவர் அளித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் ஒராண்டுக்கும் மேலாக சிறையிலேயே காலம் தள்ளி வரும் அவர், பலமுறை உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து ஜாமின் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வந்த இந்த ஜாமின் வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 12 அன்று) நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை எனவும், ஓராண்டுக்கும் மேலாக அமைச்சராகவும், 5 முறை சட்டமன்ற உறுப்பிராகவும் இருந்துள்ளவர்; அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார் என்றும் அவர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு, முதலில் ஜாமின் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் என இறுதி விசாரணை அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, ஜார்ஜ் மஸி அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜென்ரல் மற்றொரு வழக்கில் ஆஜராகி இருப்பதால் வழக்கை மதியத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்பேரில் இன்றைய தினம் இறுதி வழக்காக இந்த ஜாமின் வழக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு மீதான விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. நீதிமன்றம் கூறிய விளக்கங்களை சொலிசிட்டர் ஜெனரல் ஆக.20ம் தேதி அளிக்க உள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆக.20ம் தேதி முதல் வழக்காக பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஜாமீன் மனு விசாரணை முடிந்து இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது