பிஞ்சு குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஐந்தே மாதங்களில் நீதி!" – நெஞ்சை நெகிழ வைக்கும் நெல்லை நீதிமன்ற தீர்ப்பு!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அப்பு (28) என்பவர் மீது சிறுமியின் தாய் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரின் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 14.05.2026 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வாளர் சாந்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றம் சாட்டப்பட்ட அப்புவை கைது செய்தனர். விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி சுரேஷ் குமார் இன்று (அக்.6) குற்றவாளி அப்புவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை துரிதமாக நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் (CWC) வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மற்றும் வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய
நிலைய ஆய்வாளர் சாந்தி, வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த நீதிமன்ற தலைமை காவலர் மாலதி,குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் சாஸ்திரி பாராட்டினார்.
குறிப்பாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஐந்தே மாதங்களில் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு சட்ட நிம்மதி கிடைத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டு மட்டும் போக்சோ வழக்குகளில் 21 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 5 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.

