ஒரே ஒரு நேர்காணல்...நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சன் டிவிக்கு ஐகோர்ட் உத்தரவு..!!
90களில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், சரத்குமார் போன்றவர்களுடன் ஜோடியாக நடித்து புகழ் பெற்ற கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. ஆர்த்தி தேவி என்ற இவரது இயற்பெயர் பாரதிராஜாவால் சுகன்யா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரையுலகில் நுழைந்தார். இயக்குநர் பாரதிராஜாவால் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் முதன் முதலாக அறிமுகம் ஆனார்.
தற்போது 55 வயதாகும் இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, உறுதிமொழி, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, கேப்டன், டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம் ஆகியவை இவரது நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
இதுமட்டுமின்றி இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
குணச்சித்திர மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக கார்த்திக் நடித்த ‘தீ இவன்’ படத்தில் நடித்திருந்தார். 2019-ம் ஆண்டுக்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய அவர் நடன நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார்.
கடந்த 2002-ல் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறிய சுகன்யா ஒரே வருடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார்.
இதற்கிடையில் மலையாள திரையுலகில் பாடலாசிரியராக புது அவதாரம் எடுத்த சுகன்யா ‘டி.என்.ஏ.' படத்திற்கு பாடல் எழுதியிருந்தார்.
இந்நிலையில், 1996ஆம் ஆண்டு சந்தனக் கடத்தல் குற்றவாளி வீரப்பனிடம் நடத்தப்பட்ட ஒரு பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் வெளியான பேட்டியில் சுகன்யா குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அந்த நேர்காணலில், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் மகனுடன் தனக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், 1996 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் பேரம் பேசுவதற்காக அந்தத் தொடர்பு வீடியோ எடுக்கப்பட்டதாகவும் வீரப்பன் முற்றிலும் பொய்யான, அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறியதாக சுகன்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வீரப்பனின் இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மையற்றவை என்றும், சமூகத்தில் தனது கண்ணியம், நற்பெயர் மற்றும் அந்தஸ்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் நடிகை சுகன்யா வாதிட்டார். இந்த ஒளிபரப்பால் தனது சினிமா வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதோடு, தனக்குக் கடுமையான மன உளைச்சலும் ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தனக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1 கோடிக்கும் அதிகம் என்றாலும், நீதிமன்றத்தில் தனது கோரிக்கையை ரூ.10,00,500 ஆக அவர் சுருக்கிக் கொண்டார்.
ஆதாரங்களை ஆராய்ந்த சென்னை சிவில் நீதிமன்றம், ஒரு நிகழ்ச்சியை எடிட் செய்யவோ, வெட்டவோ, நீக்கவோ, மாற்றியமைக்கவோ அல்லது புதிய பகுதியைச் சேர்க்கவோ தனக்கு முழுமையான, கட்டுப்பாடற்ற உரிமை இருப்பதாக சன் டிவி ஒப்பந்தம் செய்திருந்தது. அவ்வாறு இருக்கும்போது, அந்த நேர்காணலை ஒளிபரப்புவதற்கு முன்பு அதன் கண்டெண்ட் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டிய கடமை சன் டிவிக்கு உள்ளது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த நேர்காணலைத் தனது சேனலில் வெளியிடுவதற்கு முன்பு, சன் டிவி முதல் எதிர்மனுதாரரான சுகன்யாவிடமிருந்தோ அல்லது வேறு மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ எந்தவொரு விளக்கத்தையும் பெறவோ, விசாரிக்கவோ முறையான முயற்சிகளை எடுக்கவில்லை.
மேலும், சன் டிவி தனது வருத்தத்தை சன் டிவி சேனலில் ஒளிபரப்பாமல், 3-ம் தரப்பு தமிழ் நாளிதழில் மட்டுமே வெளியிட்டதற்கான காரணத்தை விளக்கவில்லை. தனது சொந்த சேனலிலேயே வருத்தம் தெரிவித்திருந்தால், ஏற்கனவே அந்த அவதூறைப் பார்த்த நேயர்களை அது சென்றடைந்திருக்கும். அதை விடுத்து, குறைவான வாசகர்களைக் கொண்ட ஒரு பத்திரிகையில் மட்டும் வருத்தம் வெளியிட்டது சன் டிவியின் உள்நோக்கத்தையே காட்டுகிறது என்று நீதிமன்றம் சாடியுள்ளது.
வீரப்பன் நேர்காணல் விவகாரத்தில் நடிகை சுகன்யாவுக்கு ஆதரவாக, சென்னை சிவில் நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.10,00,500 இழப்பீடு மற்றும் நிரந்தரத் தடை உத்தரவு வழங்கி தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. குமரேஷ் பாபு, ஜூன் 5 அன்று சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து சன் டிவியின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தார்.
மனுதாரரின் (சுகன்யா) நற்பெயர் என்ன என்பது அவராலேயே சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதில் கீழ் நீதிமன்றத்தின் கண்டுபிடிப்பில் எந்தத் தவறும் இல்லை. ஒரு அவதூறான அல்லது தரக்குறைவான கூற்றுக்குத் தொடர்ந்து நற்பெயர் இழப்பு ஏற்படுவது இயல்பானதே என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

