ஜஸ்ட் மிஸ்..! மூடிய ரயில்வே கேட்டில் சிக்கிய இளைஞர்.. நூலிழையில் தப்பிய பதைபதைக்கும் வீடியோ..!

 
1

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கூல வணிகர்புரம் பகுதியில், ரயில்வே கேட் மூடப்படுவதை கண்டும் வேகமாக வந்த இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்துடன் கேட்டின் நடுவே சிக்கி கொண்டார். அப்பொழுது அந்த வழியே வந்த விரைவு ரயிலை கண்டு நிலைதடுமாறிய அவர், கடைசி நொடியில் வாகனத்துடன் விலகி சென்றதால் நூலிழையில் உயிர்தப்பினார். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள கூலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியில், சிக்னல் மூடப்படுவதைக் கண்டும் கவனக்குறைவாகச் சென்ற இளைஞர் ஒருவர், ரயிலில் அடிபடாமல் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூலவணிகர்புரம் ரயில்வே கேட் மூடப்படும் தகவல் அறிந்தும், வேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அவசரத்தில் கேட்டைக் கடக்க முயன்றுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக ரயில்வே கேட் முழுமையாக மூடிவிட்டதால், அவர் தண்டவாளப் பகுதிக்கும் கேட் தடுப்பிற்கும் இடையே தனது இருசக்கர வாகனத்துடன் சிக்கிக் கொண்டார்.

அதே நேரத்தில், அப்பாதையில் அதிவேகமாக ரயில் ஒன்று வந்துகொண்டிருந்ததைக் கண்ட அந்த இளைஞர், நிலைமையின் தீவிரத்தைப் உணர்ந்து பதறியடித்துத் தனது இருசக்கர வாகனத்தைக் கீழே போட்டுவிட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு ஓடித் தப்பினார். கண் இமைக்கும் நேரத்தில் ரயில் அதிவேகமாகக் கடந்து சென்றதால், அசம்பாவிதம் எதுவுமின்றி அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

இந்தச் சம்பவம் அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ரயில்வே கேட் மூடப்படும்போது அவசரப்பட்டு தண்டவாளத்தைக் கடக்க முயல்வது ஆபத்தானது என்றும், பொதுமக்கள் சிக்னல் விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் காவல் துறையினரும் ரயில்வே அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.