#JUST IN : என்ன பேசினார் அனிதா ராதாகிருஷ்ணன்? திடீர் கைதின் பின்னணி என்ன..?

 
1

தூத்துக்குடி ஆத்தூரில் 20-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், முதலமைச்சா் விஜய் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்ததை கிண்டல் செய்து பேசியிருந்தாா்.சட்டமன்றத்தில் CM அமா்ந்திருந்த விதம், அவாின் முகபாவம், அவாின் மைண்ட் வாய்ஸ் என அவர் பேசியது சர்ச்சையானது.
முதல்வரின் முகபாவனை 'ஐயோ நாம் ஏதோ ஒரு பொறியில் மாட்டிக்கொண்டோம்' என நினைப்பதாக இருந்தது என்றும் பேச்சு.தவறான இரட்டை அா்த்தம் உள்ள பழமொழிகளை கூறியும் பேசியதால் பரபரப்பு.

கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வரும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவருமான சி. ஜோசப் விஜய் குறித்து ஒருமையிலும், கடுமையான ஆட்சேபனைக்குரிய வகையிலும் அவர் விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின்பேரில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமைதியைக் குலைத்தல், மோதலைத் தூண்டுதல் (BNS பிரிவுகள் 352, 353(2)) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல்துறை தன்னை எந்த நேரத்திலும் கைது செய்ய நேரிடும் என்பதால், தனக்கு முன் பிணை வழங்கக்கோரி, அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி மற்றும் எதிர்ப்பு குறித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்ற முறையில் தான் பேசியதாகவும், அரசியல் கருத்துக்களை நேர்மையாக எடுத்துக்கொள்ளாமல், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “காவல்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசின் நிர்வாக குறைபாடு குறித்து மட்டுமே பேசியுள்ளார். தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. அவதூறு வழக்கு தொடர்வதற்கான முகாந்திரம் இல்லை என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “7 தடவை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பதவி வகித்தவருக்கு பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என்பது தெரியவில்லை. நலத்திட்ட விழாவில் இதுகுறித்து பேசவேண்டிய அவசியம் இல்லை. அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க போதுமான முகாந்திரம் உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்து பேச வேண்டும். அதற்காக முதலமைச்சரை அவதூறாக பேசலாமா? எந்த முதலமைச்சர் குறித்தும் அவதூறாக பேசக்கூடாது.

அனிதா ராதாகிருஷ்ணன் ஒன்றும் சாதாரண மனிதர் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அதற்கான தகுதியுடன் பொதுவெளியில் பேச வேண்டும் என தெரிவித்து, அவருடைய முன் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், தூத்துக்குடி ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஆய்வுக்கு சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.