#JUST IN : அரசு ஏமாற்றிவிட்டது: நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தை கையில் எடுக்கும் டாஸ்மாக் பணியாளர்கள்..!

 
1

 தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தனசேகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது 

“டாஸ்மாக் பணியாளர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தியது. அப்போது, 18, 19 ஆகிய இரண்டு தேதிகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் ஒப்புக்கொண்ட விஷயங்களை அறிக்கையில் வெளியிடாமல், ஊதிய உயர்வு 1,000 ரூபாய் என்ற ஒரு அறிவிப்பு மட்டும் இடம்பெற்றிருந்தது.

இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ள டாஸ்மாக் பணியாளர்கள் அரசின் மீது நம்பிக்கையற்ற தன்மையோடு இருக்கிறார்கள். எனவே எங்களுடைய கோரிக்கையை மறுபரிசீலனை செய்து, ஒப்புக்கொண்டபடி மாற்று அறிக்கையை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 7ஆம் தேதி மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு, எங்களுடைய போராட்டக் குழு மீண்டும் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளோம்.

அதன்படி காலவரையற்ற போராட்டத்தை மீண்டும் துவங்க இருக்கிறோம். அரசு ஒருவேளை எங்களுடைய கோரிக்கையை பரிசீலிக்காவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இடைக்கால ஊதிய உயர்வாக ரூ. 5,000 கேட்டிருந்தபோதிலும், வெறும் ரூ.1000 தான் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் ஏப்ரல் மாதம் முதல் என்று சொல்லியிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என்று கூறியிருந்தனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில் குழு என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துதல் ஆகியவைதான் எங்களுடைய பிரதான கோரிக்கை.

கடந்தமுறை அரசு அளித்த வாக்குறுதியை நம்பித்தான் நாங்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டோம். ஆனால் அரசு எங்களை ஏமாற்றி இருக்கிறது என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக புரிந்துகொண்டோம்” என்றார்.

அவரிடம் எத்தனை நாட்களுக்குள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டதற்கு, “இப்போது நாட்கள் குறைவாகவே இருக்கிறது. அநேகமாக 10ஆம் தேதி தேர்தல் சம்பந்தமான அறிக்கை வெளியிட வாய்ப்பு இருக்கிறது. எனவே அதற்கு முன்பாகவே எங்களை அழைத்து பேசி, ஏற்கனவே ஒப்புக்கொண்டதை அறிக்கையாக வெளியிட வேண்டும்” என்றார்.

அடுத்தகட்டமாக என்னமாதிரியான போராட்டத்தில் ஈடுபட போகிறீர்கள்? என்று கேட்டதற்கு, “இப்போது மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். பொதுவாக கைது செய்தால் நாங்கள் வீட்டிற்கு போய்விடுவோம். ஆனால் இந்த முறை போகமாட்டோம். சிறையில் அடைத்தாலும் சிறைக்குள்ளேயே இருப்போம். 2 நாட்களுக்குள் அரசு எங்களை அழைத்து பேசி தீர்வு காணாவிட்டால், வேலை நிறுத்தத்தைத் தவிர வேறு வழி எங்களுக்குச் தெரியவில்லை” என்று பதிலளித்தார்.