#JUST IN : 3 வயது குழந்தை இறப்பில் திடீர் திருப்பம் : கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது - காவல்துறை விளக்கம்..!

 
1

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சிப்காட் சுற்றுப்பகுதிகளில் பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், சிப்காட் பகுதியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் குடியிருப்பில் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பொதுமக்கள் உதவியுடன் தேடினர். அப்போது இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்கள் சிலர் முட்புதரில் குழந்தை காயங்களுடன் உடல்நலம் குன்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அருகில் வசித்து வந்த இளைஞர் பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

சிறுமியிடம் வடமாநில இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட குழந்தையை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதனிடையே, கொடூர செயலில் ஈடுபட்ட வட மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சிறுமியை ஒரே அறையில் இருந்த வட மாநில இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும், அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த பிபின் மஞ்சி 19 என்ற இளைஞரை கைது செய்துள்ளதாக கூறினர். 

இதனிடையே, அந்த குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதகாவும் சில தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட சிறுமியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் பொய்யான செய்திகளை எந்த ஒரு ஊடகத்திலும் பரப்புவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என காவல்துறை தெரிவித்துள்ளது.