#JUST IN :கேரள முதலமைச்சராக சதீஷன் தேர்வு..!
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் பதவிக்கு கட்சிக்குள் கடும் போட்டி நிலவியது.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில் 102-இல் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக, புதிய முதலமைச்சரை தேர்வுசெய்வதில் இழுபறி நீடித்தது.
இது சம்பந்தமாக காங்கிரஸ் தலைமை தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தது.
தேர்தல் ரிசல்ட் வெளியாகி ஒரு வாரம் கடந்து கேரளாவில் முதலமைச்சர் தேர்ந்தெடுக்க முடியாமல் அகில இந்திய காங்கிரஸ் தலைமை திணறி வந்தது. இது சம்பந்தமாக மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தி வந்தனர்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், கேரள சட்டப்பேரவை காங்கிரஸ் குழு அளித்த அதிகாரத்தின் அடிப்படையில், அனைத்து ஆலோசனைகளையும் காங்கிரஸ் தலைமை முடித்துள்ளதாகவும், அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்று முடிவுசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஒரு வழியாக தற்போது வி.டி. சதீசன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.. இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.கடந்த ஆட்சியில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீஷன் முதலமைச்சராக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

