#JUST IN : முதலமைச்சர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!
கடந்த 2015-16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் படத்தில் நடித்ததன் மூலம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ’புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் திரைப்பட வருமானத்தை கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளார் என கண்டறிந்தது. வருமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மறைத்ததற்கான சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதத்தை விதித்து, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, தனக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விஜய் தரப்பில் தாக்கல் செய்யபட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், வருமான வரித்துறை சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், மதிப்பீட்டு நடவடிக்கைகள், ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்த உத்தரவு ஆகியவற்றை ஆய்வு செய்து, முதல்வர் விஜய்-க்கு எதிராக வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும், வருமானத்தை மறைத்ததற்காக மோசடி, குற்றச் சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட கோரியும் கொடுங்கையூரைச் சேர்ந்த எம்.ராஜ்குமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை திரும்ப பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

