#JUST IN : நமக்கான வாகனம் அருகில் வந்துவிட்டது!.. தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்..!
பாட்டாளி மக்கள் கட்சி உட்கட்சிப் பூசலால், ராமதாஸ் தரப்பு மற்றும் அன்புமணி தரப்பு என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தான், நாளை தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்துப் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வேளையில், இன்று ராமதாஸ் அவரது கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், நமக்கான வாகனம் நம் அருகே வந்துவிட்டது என தெரிவித்திருகிறார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது. தொடர்ந்து, அந்தக் கடிதத்தில், ” என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…? எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கின்றீர்கள். அணிவகுப்பீர்கள்.
நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பி பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இட ஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம். சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம். இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரி கல்வி, ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி,நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பண வீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.
நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை. உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து இலட்சியத்தை வெல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வாகனம் என்பதை கூட்டணியைக் குறிப்பிட்டு கூறுகிறார் எனவும் நாளை நடைபெறும் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைப்பது தொடர்பான அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

