#JUST IN : தனிக்கட்சி குறித்த கேள்விக்கு... ஓபிஎஸ் அடித்த திடீர் பல்டி ..!

 
1 1

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறுவதாக அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரை சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரை சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஒரு காலத்தில் அதிமுகவில் சசிகலா ஆட்சிக்கு வருவதற்கு எதிராக தர்மயுத்தம் செய்தவர் ஓ பன்னீர்செல்வம். அப்போதில் இருந்தே ஓ பன்னீர்செல்வம் பாஜக உடன் நெருக்கமாக இருந்ததாக செய்திகள் வந்தன. பாஜக தலைவர்களையும் அவ்வப்போது ஓ பன்னீர்செல்வம் சந்தித்து வந்தார். அதன்பின் அதிமுக உடைந்து மீண்டும் ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி கரம் கோர்க்க பாஜக முக்கியமான காரணமாக இருந்தது. ஓ பன்னீர்செல்வம் அப்போது பாஜக உடன் மேலும் நெருக்கம் ஆனார்.

அதன்பின் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்ட பின் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையே நீண்ட சட்ட போராட்டம் நடந்தது. இருவருக்கும் இடையே மிக நீண்ட சட்ட போராட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து டெல்லி ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று நம்பினார். டெல்லி பாஜக ஆதரவு கிடைத்தால் .. வழக்கில் வெல்ல முடியும் என்றும் ஓ பன்னீர்செல்வம் நம்பினார். ஆனால் அதிமுக தொடர்பான அனைத்து வழக்கிலும் ஓ பன்னீர்செல்வம் தோல்வியையே தழுவினார். இப்படி ஓ பன்னீர்செல்வம் தொடர்ச்சியாக பாஜகவையும், மோடியையும் நம்பியே இருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்.அவர் தனி கட்சி ஆரம்பிக்க போவதாகவும் தகவல் வெளியானது. இவர் கட்சி ஆரம்பிப்பாரா இல்லை விஜயின் தவெக-வில் சேருவாரா என பல பேச்சுகள் அடிபட்டன. இப்படிப்பட்ட சூழலில் தான் ஓபிஎஸ் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்   “நான் எந்த சூழ்நிலையிலும் எப்போதும் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை. இந்த கேள்வியை தவிர்த்துவிடுங்கள்” என்றார். மேலும், “செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு என்னிடம் பேசவில்லை. நானும் அவரிடம் பேசவில்லை” என பதிலளித்தார்.