#JUST IN : முதலமைச்சர் விஜய்யிடம் மேடையில் கோரிக்கை வைத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!
திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், வழிநெடுகிலும் தொண்டர்களின் உற்சாக வரவேற்புடன் கரூர் வந்தடைந்தார். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தொகுத்து வழங்கினார். பால் வளத்துறை அமைச்சர் விஜயலெட்சுமி வரவேற்புரை ஆற்றினார்.தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்சியில், முதலமைச்சர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுகவில் இருந்து விலகி தற்போது தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முதலமைச்சர் விஜய்க்கு வெள்ளியால் ஆன வாளை பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், எம்ஜிஆரின் அன்பும், ஜெயலலிதாவின் வீரமும் ஒன்று சேர சேர்ந்தவர் முதலமைச்சர் விஜய் என புகழாரம் சூடினார். தற்போது இந்தியாவே முதலமைச்சர் விஜய்யை உற்று நோக்குவதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் இனி தவெக ஆட்சிதான் என்றும், விஜய் தான் நிரந்தர முதலமைச்சர் என்றும் அவர் பேசினார்.
"தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் விஜய். தமிழ்நாடு இனிமேல் தளபதி கையில் தான் உள்ளது. தீயசக்தி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் எல்லாம் சீர்கெட்டு இருந்தது. இவை அனைத்தையும் தூள் தூளாக்குபவர் தளபதி. இயக்கம் ஆரம்பித்த 2 ஆண்டுகளில் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தவர் புரட்சி தளபதி விஜய்" என்றார்.
முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் :
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். அதாவது, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை இனாம் அடிப்படையில் பெற்று குடியிருப்பவர்களை அதில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

