#JUST IN : விஜய் கை காட்டுபவர்தான் எம்எல்ஏ - செங்கோட்டையன் பேச்சு
புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை நடத்திய விஜய், இன்றைய தினம் ஈரோட்டில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு – கொச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சரளை பகுதியில் தான் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே நெடுஞ்சாலையில் இருந்து உட்புற சாலை வழியாக வருவோருக்கு வழிகாட்டும் வகையில் போக்குவரத்து போலீசார் முக்கிய ஏற்பாடுகளை செய்துள்ளனர். குறிப்பாக குன்னத்தூர் நால் ரோடு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், 'ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். 234 தொகுதியிலும் விஜய் கை காட்டுபவர்தான் சட்டமன்ற உறுப்பினர். நாளை தமிழகத்தை ஆளப்போவது விஜய்தான். நல்ல தலைவர் தேவை என்ற மக்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது' என்றார்.
மேலும் "மக்களுக்கு பணியாற்ற ஒரு தலைவர் வந்துள்ளார். புரட்சி தலைவருக்கு பிறகு புரட்சி தளபதியை பார்க்கிறேன். இது வெறும் கூட்டம் அல்ல. தேர்தலில் தீர்ப்பளிக்கும் கூட்டம். எதிர்காலம் பிரகாசமாக மாற போகிறது. இந்த கூட்டத்தின் மூலம் அது தெரிகிறது" என கூறினார்.


