#JUST IN : சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமின்..!!
மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சவுக்கு சங்கர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் சிறுநீர் கழிப்பதற்காக வாகனம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அப்போது, மற்றொரு காரில் வந்த சில நபர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் போலீசாரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, கற்களை எறிந்தனர். சவுக்கு சங்கரும் போலீசார் மீது கல் வீசியதாகக் கூறப்படும் சம்பவத்தின் அடிப்படையில் இவ்வழக்கு பதியப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் காரில் வந்த நபர்கள் மற்றும் சவுக்கு சங்கர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் சவுக்கு சங்கர் மனுத்தாக்கல் செய்தார்,.
அவர் மனுவில், ''அப்படிப்பட்ட சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. தனக்கு எதிராக ஒரு பொய்க் கதை புனையப்படுகிறது. உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தன் மீது சுமத்தப்பட்டுள்ளது'' என கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை எதிர்த்து, கூடுதல் அரசு வழக்கறிஞர் தாமோதரன் வாதிடுகையில், '' சவுக்கு சங்கர் மீது 48 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது இடைக்கால ஜாமீன் காலம் முடிவடைந்த பிறகு, சட்டத்தை மதிக்கும் குடிமகனாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் சரணடைந்திருக்க வேண்டும்ஆனால் அதற்குப் பதிலாக அவர் தலைமறைவாகிவிட்டார். சவுக்கு சங்கரை ஜாமீனில் விட்டால், அவர் மீண்டும் தலைமறைவாகி சாட்சிகளை அச்சுறுத்த அதிக வாய்ப்புள்ளது. எனவே அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது'' என்று தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட ஐகோர்ட் நீதிபதி விக்டோரியா கவுரி, சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
நிபந்தனைகள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் தங்கியிருக்கும் இடத்தை கண்டறிய முடிந்தால், அவரைத் தொடர்ந்து சிறையில் அடைப்பது அவசியமில்லை என நீதிபதி தெரிவித்தார்.

