#JUST IN : முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்கு பதிவு.!

 
1

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் பொறியாளர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவாகியுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

​'அறப்போர் இயக்கம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  ஜெயராம் வெங்கடேசன் என்பவர் கடந்த 20.04.2022 அன்று லஞ்ச ஒழிப்புத்துறையிடம் 4 பக்கங்கள் கொண்ட புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், மார்ச் 2022-ல் கரூர் மற்றும் பிற பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டுச் சேர்ந்து, பணிகள் ஏதும் மேற்கொள்ளாமலேயே பொதுப் பணத்தை முறைகேடு செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

திருப்பூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டத்தில், கரூர் உபகோட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக (TPR-007) 'சங்கரானந்த் இன்ஃப்ரா' (Sankaranand Infra) நிறுவனத்திற்கு சுமார் ₹7 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் எந்தவொரு சாலையும் அமைக்கப்படாத நிலையில், 2022 மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் ₹3.23 கோடி நிதி முறைகேடாக விடுவிக்கப்பட்டுள்ளது.

​ இந்த முறைகேடு தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், கரூரைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன் உட்பட 4 அதிகாரிகளும், ஈரோடு நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள் பிரிவைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் நிதிலன் உட்பட 5 அதிகாரிகளும் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். முறைகேடு வெளிச்சத்திற்கு வந்ததும், குற்றத்திற்கான ஆதாரங்களை அழிக்கும் நோக்கில், காவல்துறையின் பாதுகாப்போடு இரவோடு இரவாக அவசர அவசரமாக சாலை அமைக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் கூட்டுச் சேர்ந்து முயன்றதாக புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

​அறப்போர் இயக்கத்தின் புகாரைத் தொடர்ந்து, அரசு (பொதுத் துறை) கடந்த 23.06.2026 அன்று அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகம் (V&AC Headquarters Crime No.3/2026) ஜூன் 24, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

அரசு அதிகாரிகள் உட்பட 10 பேர் (A-1 முதல் A-10 வரை) மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் 'சங்கரானந்த் இன்ஃப்ரா'  என 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கூட்டுச் சதி, பொதுப் பணத்தை முறைகேடு செய்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 120B, 409, 420, 468, 471, 109 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Corruption Act, 1988 as amended in 2018) பிரிவுகள் 7(c), 13(2) r/w 13(1)(a) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.