தமிழக அரசுக்கு சிறப்பு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த 'ஜாய் ஆலுக்காஸ்'..!
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக முதற்கட்ட நடவடிக்கையாக 4,41,667 தங்க மோதிரங்களை 22 கேரட் (916 ஹால் மார்க்) தரத்தில் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு அரசின் மருத்துவ சேவைகள் கழகம் முறைப்படி கடந்த ஜூலை 14 ஆம் தேதி டெண்டர் வெளியிட்டது. இதற்காக நிதிநிலை அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கான டெண்டருக்கு பல நிறுவனங்கள் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை விண்ணப்பித்திருந்தன. அதனைத் தாெடர்ந்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டர் திறக்கப்பட்டது. அதில் குறைந்த தொகையை அளித்த ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த டெண்டரில், தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம், ஹால்மார்க் முத்திரை, பேக்கிங், காப்பீடு மற்றும் போக்குவரத்து என அனைத்துக் கூடுதல் செலவுகளுக்கும் சேவைக் கட்டணமாக 1 பைசா கொடுத்தால் போதும் என ஜாய் ஆலுக்காஸ் குறைந்த விலைப்புள்ளி அளித்தது.
இதையடுத்து, கடந்த ஜூனில் இருந்து, நான்கு மாதங்களுக்கு தேவையான, ஒரு லட்சத்து 28,499 தங்க மோதிரங்கள் செய்யும் பணியில், 70 சதவீதம் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கும், 30 சதவீதம் கல்யாண் ஜுவல்லஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் செப்., 15ல் தொடங்க உள்ளது. திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 22க்கு பின், அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் பயன்பெறுவர் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிறப்பு வீடியோ வெளியிட்டு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது 'ஜாய் ஆலுக்காஸ்'.
🔔 | சிறப்பு வீடியோ வெளியிட்டு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த 'ஜாய் ஆலுக்காஸ்' ! ❤️
— கழுகுப்பார்வை 🦅🇮🇳 (@TheEagle3_0) August 31, 2026
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் 👑
நன்றி @drjoyalukkas அவர்களே @JoyalukkasIndia pic.twitter.com/GcR1ZcOncu
.

