‘கங்குவா’ முதல் அரை மணி நேரம் மோசம்தான்... இதை சூர்யா மனைவியாக சொல்லவில்லை- ஜோதிகா
பெரிய பட்ஜெட் படங்களுக்கு வராத விமர்சனங்கள் கங்குவா படத்திற்கு மட்டும் வருவது ஏன் என நடிகை ஜோதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ள திரைப்படம் கங்குவா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி, வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா மாறுபட்ட தோற்றம் மற்றும் படத்தின் டீசர், ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யாவின் திரைப்படம் திரைக்கு வந்ததால் ரசிகர்கள் மத்தியில், பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் 3டி தொழில்நுட்பத்திலும் இப்படம் தயாராகியுள்ளது.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் 280 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட கங்குவா படத்திற்கு பல்வேறு எதிர்மறை விமர்சனங்களும், படம் குறித்த அவதூறுகளும் பரப்பப்பட்டன. இந்நிலையில் அவற்றுக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ள நடிகை ஜோதிகா, “கங்குவா முதல் சோ முடியும் முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது அதிர்ச்சியளிக்கிறது.. கங்குவா படத்தில் இடம்பெற்றுள்ள நல்ல அம்சங்கள் படத்தை விமர்சிப்பவர்களுக்கு தெரியவில்லை. எதிர்மறையாக கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்கு வேறு எதுவும் செய்யவில்லை. இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்ற படங்களை இந்த அளவுக்கு அவர்கள் விமர்சனம் செய்யவில்லை. கங்குவாவை விட மோசமான படங்கள் வந்திருக்கின்றன.
பெரிய பட்ஜெட் படங்களுக்கு வராத விமர்சனங்கள் கங்குவா படத்திற்கு மட்டும் வருவது ஏன்? 3 மணிநேர படத்தில், முதல் 30 நிமிடங்கள் மட்டுமே நன்றாக வரவில்லை. சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன். மற்றபடி இந்த படத்தில் சிறந்த ஆக்ஷஷன் காட்ச்கள் உள்ளன், கேமரா வேலைபாடுகள் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காததாக இருக்கிறது. இந்த பதிவை சூர்யாவின் மனைவியாக இல்லை, ஒரு சினிமா காதலராக தெரிவிக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.