கரூர் பணி நியமன ஆணை ரத்து TNPSC போட்டியாளர்களுக்கு கிடைத்த வெற்றி- ஜோஸ் சார்லஸ் மார்டின்

 
“தெரிந்தேதான் ஊழல் செய்கின்றனர்”- அரசை சாடிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

 

கடந்த வருடம் கரூரில் நடிகர் விஜயை காணச்சென்று   நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தாருக்கு  தவெக அரசால் வழங்கப்பட்ட அரசுப்பணிகளின் அரசாணையை ரத்து செய்யுமாறு நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணையை ரத்து செய்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நான் தான் முதல்வர் வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் திட்டவட்டம்

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டி, “தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான திரு. ஜோசப் விஜய், கடந்தாண்டு கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி, தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசும்போது, கூட்டநெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அண்மையில் ஜூலை 10ஆம் தேதி, கரூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய், நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நாம் அப்போதே, 41 பேர் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து உரிய தண்டனையைப் பெற்றுத் தந்தால் தான், அவர்களது ஆன்மா சாந்தியடையும் என்று வலியுறுத்தினோம். மேலும், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்குப் பணி நியமன ஆணை தந்தால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு, இரவு பகல் பாராமல் படித்து தயாராகுபவர்களுக்கு இந்த பணி நியமன நடவடிக்கை மனச்சோர்வை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்து இருந்தோம். மேலும், பணிநியமனத்தைத் தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தோம்.



இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கும் அரசாணையை இன்று ரத்து செய்து, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சுயதொழில் முனைவோராக மாற்ற பயிற்சிகளை வழங்கி, பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உதவியிருக்கலாமே எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறது. கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சாதாரண பணி வழங்கியதாக தமிழ்நாடு அரசு கூறுவதை ஏற்க முடியாது என்றும்; எந்த ஒரு அரசுப்பணியும் சாதாரண பணி அல்ல என்றும்; அது ஒரு குடும்பத்திற்கு உதவும் பணி என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், சாலை விபத்தில் தினந்தோறும் உயிரிழப்பு நடக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு எல்லாம் அரசு வேலை வழங்க முடியுமா என்றும்; இளைஞர்கள் பலர் வேலைக்காக விண்ணப்பித்து வரிசையில் நிற்கும்போது, இந்தப் பணி நியமனத்தை ஏற்க முடியாது என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறது. உள்ளபடியே, இத்தீர்ப்பை மிகுந்த நிம்மதியுடன் நான் வரவேற்கிறேன். ஏனெனில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்திய குரூப்-4 போட்டித்தேர்வை சராசரியாக கடந்தாண்டு 20 லட்சம் பேர் எழுதியுள்ளனர். அவ்வளவு போட்டிகள் நிறைந்த அரசுப் பணி, இத்தீர்ப்பின்மூலம் தகுதியானவர்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. கரூரில் பணி நியமன ஆணைகளை ரத்து செய்திருப்பது TNPSC போட்டித்தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.