அர்ஜுன் ஆதவா வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்..!

 
1

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் தவெக தலைவர் விஜய், திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என முழங்கினார் விஜய்.

தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "பல பொய் பிரச்சாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. டெல்லியில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் திமுக அண்ணாமலையையே செட் செய்து விட்டது

நன்றாக கவனித்தால் தெரியும், திமுகவின் பிரச்சினைகளை அவர் எப்படி திசை திருப்புவார் என்று. நமது தலைவர் விஜய் புலி மாதிரி அமைதியாக இருக்கும் போது திடீரென ஒரு ஆடு வந்து சம்பந்தமே இல்லாமல் வந்து, தொழிலை சம்பந்தப்படுத்தி பெண்ணை கேவலமாக பேசியிருக்கிறார். ஒரு பெண்ணை கேவலமாக பேசும் தலைவரை பாஜக வைத்திருக்கும் போதே தெரிந்துவிட்டது அந்த கட்சியின் நிலைமை." என விமர்சித்தார்.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "அண்ணாமலை அரசியலுக்கு வந்திருப்பது அதிகாரத்திற்கு அல்ல. தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது தான். என்னால் யாருக்கும் பிரச்சினை வராது. மாற்றி, மாற்றி பேசுபவன் நான் அல்ல. எனக்கு தமிழகம் முதன்மையானது. பாஜக வளர்ச்சி முக்கியம். எனது தனிப்பட்ட வளர்ச்சியோ, மற்றவர் வளர்ச்சியோ முக்கியம் கிடையாது" எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.

அண்ணாமலை பேசுகையில், "திமுகவுக்கு எதிராக அதிக போராட்டங்களை நடத்திய கட்சி பாஜக. திமுகவுக்கு எதிராக பேசியதாக அதிக அவதூறு வழக்குகள் என் மீது தான் இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலேயே ஒரு கட்சித் தலைவர் மீது அதிக எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள் என்றால் அது என் மீது தான். திமுகவை தீர்க்கமாக எதிர்த்து தினமும் பேசுவது யார்?

வாய் வியாபாரிகளுக்கு மாமனார் பணம் இருக்கிறது. கொழுத்துப் போய் இருக்கிறார்கள். மைக் ஓசியில் வந்துவிடுகிறது, என்ன வேண்டுமானாலும் பேச வாய்ப்பு கிடைக்கிறது. நேர்மையான அரசியல்வாதியாக வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். படித்து முடித்த முதல் நாளில் இருந்து எந்த தனியார் நிறுவனத்திலும் சம்பளம் பெறாதவன். என் முதல் சம்பளமே மக்களின் வரிப்பணம் தான். 10 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியவன் நான்.

எனது சொந்த நிறுவனத்தில் கூட ஒரு ரூபாயைக் கூட நான் சம்பளமாகப் பெற்றதில்லை. இத்தனைக்கும் நான் இப்போது எந்த அரசுப் பதவியிலும் இல்லை, பஞ்சாயத்து தலைவராகக் கூட இல்லை என்றாலும், ஒரு ரூபாய் பணத்தை தனியாரிடம் இருந்து பெற்றதில்லை. 2011 ஐபிஎஸ் ரேங்க்கில் எனது ரேங்க் 2.நான் என் மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை, லாட்டரி விற்று வரவில்லை. எனக்கு கொஞ்சம் தன்மானம் அதிகம். சொந்தமாக நின்று சுயம்புவாக நிலைத்து பேசுபவன் நான். எனக்கு கொஞ்சம் வாய் பேச்சு, குறும்பு அதிகம். வைராக்கியம் அதிகம். நான் இங்கு பவருக்காக வரவில்லை. எதை இழந்தாலும் மீண்டும் வருவேன்" என ஆவேசமாக பதில் அளித்துள்ளார் அண்ணாமலை.


இந்நிலையில் இது பற்றி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் தமிழக பாஜக தலைவர் திரு.கே. அண்ணாமலைக்கு எதிராக அர்ஜுன் ஆதவா வெளியிட்ட கருத்துக்கு எனது ஆட்சேபனையையும் மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தனது அரசியல் மற்றும் நிதி பேராசையை பூர்த்தி செய்ய, "அவர் தனது மாமனார் பணத்தை, அதாவது என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார், எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கிறார், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகிறார்" என்ற அவரது கூற்றையும் நான் ஆதரிக்கிறேன். அவரது முட்டாள்தனத்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், அவரது செயலால் மேலும் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால், நீதிமன்றத்தை அணுகி எனது நற்பெயரைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்பதையும் தெளிவுபடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.