பாஜகவில் சேருங்கள், இல்லாவிடில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்கொள்ள தயாராகுங்கள் : டெல்லி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு..!

 
1

டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அவர் இப்போது நீதிமன்ற காவலில் இருந்தாலும், முதல்வராகத் தொடர்ந்து வருகிறார். சிறையில் இருந்தாலும் அவரே முதல்வராகத் தொடர்வார் என்று ஆம் ஆத்மி திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்கள். இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி அமைச்சர் அதிஷி சில பரபர கருத்துகளைக் கூறினார். அதாவது கெஜ்ரிவாலுக்கு பிறகு இப்போது அமலாக்கத் துறை தன்னை கைது செய்யத் திட்டம் போட்டு இருப்பதாகக் கூறிய அதிஷி, கூடவே சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சதா ஆகிய ஆம் ஆத்மி தலைவர்களையும் அமலாக்கத் துறை கைது செய்யத் திட்டம் போட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "விரைவில் எங்களின் வீட்டில் அமலாக்கத் துரை ரெய்டுகள் நடத்தப்படும்.. பின்னர் நாங்கள் காவலில் வைக்கப்படுவோம் என்று எனக்குத் தகவல் வந்தது. கெஜ்ரிவாலை கைது செய்துள்ள நிலையில், பாஜக இப்போது ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களைக் குறிவைக்கிறது.

“எனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக எனது நெருங்கிய உதவியாளர் மூலம் பா.ஜ.க. என்னை அணுகியது. நான் பா.ஜ.க.வில் சேரவில்லை என்றால் அடுத்த ஒரு மாதத்தில் நான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவேன். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் மேலும் 4 ஆம் ஆத்மி தலைவர்களான சவுரப் பரத்வாஜ், அதிஷி, துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சாட் ஆகியோரை கைது செய்வார்கள்.

நேற்று அமலாக்கத்துறை சவுரப் பரத்வாஜ் மற்றும் எனது பெயரை (அதிஷி) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில் ஒன்றரை ஆண்டுகளாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யிடம் கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் இதனை சொல்கிறேன். இது தொடர்பான விவரங்கள் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையிலும், சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையிலும் உள்ளது. எனவே இதனைக் கூறுவதற்கு காரணம் என்ன. அரவிந்த் கெஜ்ரிவால் மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் இருந்தும் ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருப்பதாக பா.ஜ.க. கருதுகிறது என்பதே காரணம். இப்போது ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த கட்ட தலைமை நிர்வாகிகளை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.