“10 தொகுதிகள் கேட்டிருக்கிறோம்; ஆட்சியில் பங்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்”- ஜான் பாண்டியன்

 
ஜான் ஜான்

10 தொகுதிகள் வரை கேட்டுள்ளேன், ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு கொடுத்தால் நல்லது தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் பேட்டியளித்துள்ளார்.

Way2News Tamil


மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பரமக்குடியில் திமுக அரசு கட்டியுள்ள தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தின் நிலை மிக வேதனையாக உள்ளது. முதலில் அரங்கம் என்றார்கள், பின்னர் மணி மண்டபம் என்றார்கள், ஆனால் உண்மையில் அங்கு கல்யாண மண்டபம் கட்டியுள்ளனர். எங்கள் சமூக மக்களை அவமதித்துள்ளது திமுக அரசு. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். மற்ற தலைவர்களின் மணிமண்டபத்தை சிறப்பாக கட்டிய நிலையில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம் என்ற பெயரில் கொச்சைப்படுத்தி உள்ளனர். வாக்குக்காக அரசியல் செய்ய வேண்டாம். சரியான முறையில் மணிமண்டபத்தை திருத்தி அமைக்க வேண்டும். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த சிலையை நாங்கள் மாற்றுவோம். ஓட்டுக்காக திமுக அரசு செயல்படுவதை கண்டிக்கிறோம். ஒரு தியாகியை திமுக கொச்சைப்படுத்தியுள்ளது. மணிமண்டபத்திற்கு முதலில் ஏன் அரங்கம் என்றீர்கள்? அதற்கு என்ன காரணம்? இமானுவேல் சேகரன் குடும்பத்தினர் இதற்கான வருத்தத்தை முன்னரே பதிவு செய்திருக்க வேண்டும். அரசு விழா என்ற போர்வையில் அவர்களே ஒரு கமிட்டியை வைத்துக்கொண்டு மண்டபத்தை திறந்து வைத்துள்ளார்கள். இந்த மண்டபத்தை வாடகைக்கு விடும் வரலாற்று செயலை திமுக அரசு தான் செய்ய போகிறது. இமானுவேல் சேகரன் மகனுக்கு குடும்பத்திற்கு அவருடைய தியாகம் பற்றி தெரியாது. அவரை அடிமையாக வைத்து அரசியலுக்காக வைத்துள்ளார்கள். தேர்தலுக்காக நான் இதை பேசவில்லை, நான் இப்போது பார்த்ததால் பேசுகிறேன்.


வேட்பாளரை பொறுத்து தான் மக்கள் வாக்களிப்பார்கள். பணத்திற்கு மக்கள் வாக்களிக்கும் நிலை தமிழகத்தில் அதிகமாக உள்ளது. 10 தொகுதிகளுக்கு மேல் கேட்டுள்ளோம். தென்மாவட்டத்தில் தொகுதிகளை கேட்டுள்ளேன். நெல்லையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடுவேனா என பேச்சுவார்த்தைக்கு பின் தான் தெரியும். விஜய் பாஜக கூட்டணி வாக்குகளை பிரிப்பார் அல்லது சிறுபான்மை தலித் மக்கள் வாக்கை அதிகளவில் பெறுவார் என செய்தியாளர்கள் கேட்கின்றனர். ஒரு முறை கூட தேர்தலில் நிற்காத விஜய் குறித்து இப்போது எதுவும் பேசமுடியாது. அவர் தேர்தலை சந்திக்கட்டும். தம்பி விஜய் இப்போது தான் அரசியல் கட்சியை துவக்கியுள்ளார். திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதை வைத்து விஜய் வெற்றி பெறுவார் என சொல்ல முடியாது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என நான் கேட்க மாட்டேன். தேர்தலின் போது என்ன சூழல் இருக்கிறதோ அதனடிப்படையில் எங்களுக்கான இடங்களை பெறுவோம். ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு கொடுத்தால் நல்லது. தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் இது நிகழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. பிரதமர் மோடி தான் மத்திய அரசில் ஆட்சியில் பங்கு கொடுத்துள்ளார்” என பேசினார்.