“ஜெயலலிதா ஆட்சியில் பெயரை எடுத்துவிட்டார்கள்” - அமைச்சர் சிவசங்கர்

 
சிவசங்கர் சிவசங்கர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என கலைஞர் வைத்த பெயரை ஜெயலலிதா ஆட்சியில் எடுத்து விட்டார்கள் என அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் BS6 ரக 4 புதிய பேருந்துகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என பெயர் வைத்தவர் கலைஞர். அந்த பெயர் பயன்பாட்டிற்கு நீளமாக இருக்கிறது என ஜெயலலிதா ஆட்சியில் எடுத்துவிட்டார்கள். போராடும் தலைவர்கள் எல்லாம், ஒரு வார்த்தைகூட ஜெயலலிதாவை பெற்றி பேசுவதில்லை. இப்போது மாற்றியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தேவையான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். 

முதலமைச்சராக இருந்தவருக்கு எப்படி இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருக்கிறது என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. அவருடைய காலத்திலும், அதற்கு முன்னர் இருந்த அவர்களின் அம்மாவின் காலத்திலும் கடன் வாங்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலம் கடன் வாங்குகிறது என்றால் அவர்களின் கடன் வாங்கும் சக்தி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு மத்திய அரசு குறியீட்டை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அந்தக் குறியீட்டிற்குக் குறைவான அளவில்தான் கடன் வாங்கியுள்ளோம். இவர்கள் ஒப்பிடும் மற்ற மாநிலங்கள் எல்லாம் அந்த அளவைத் தாண்டி வாங்கியுள்ளனர்” என்றார்.