தஞ்சையில் ஜெயலலிதா கோயில் இடிப்பு.. கழிவுநீர் கால்வாயை அக்கிரமித்து கட்டியதால் இடித்து அகற்றிய அதிகாரிகள்..

 
ஜெயலலிதா கோயில்


தஞ்சையில் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஜெயலலிதா  கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக சாலை மேம்பாட்டுப் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக தஞ்சை  தேரோடும் வீதிகளில் சாலைக்கலை அகலப்படுத்தும் பணியும்,  கால்வாய்களை சீரமைக்கும் பணியிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தஞ்சாவூர் பகுதியில் உள்ள  ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டு வருகின்றன.

ஜெயலலிதா கோயில்

அந்தவகையில் தஞ்சை மேல வீதியில் கொங்கனேஸ்வரர் கோயில் அருகில், உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோயிலும் இடித்து அகற்றப்பட்டது. ஜெயலலிதா மறைந்த சில வாரங்களிலேயே  கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த கோவில் கட்டப்பட்டது.  அதிமுகவைச் சேர்ந்த  முன்னாள் கவுன்சிலரும் கோட்டை பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளருமான சுவாமிநாதன் இந்தக் கோயிலைக் கட்டினார்.  132 சதுர அடியில் , 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் ஜெயலலிதா மற்றும்  எம்.ஜி.ஆரின் உருவ சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

ஜெயலலிதா கோயில்

அதேபோல் ஜெயலலிதாவின் பல்வேறு புகைப்படங்களும் இந்த கோயிலில் வைக்கப்பட்டிருந்தன.  ஸ்மார்ட் சிட்டி  திட்ட பணிகளின் போது  இந்தக் கோயில் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, அதனை  மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர். அப்போது கோயிலில் இருந்த ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அனைத்தும் சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.