"எதிர்க்கட்சியாக ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு" - ஜெயக்குமார் கண்டனம்!!

 
jayakumar

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு என்று பச்சோந்தியாக வண்ணம் மாறும் திமுக-விற்கு ஜெயக்குமார்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற்ற கழக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில், தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் 2026-ல், நிர்வாகத் திறனுள்ள எங்கள் கழகப் பொதுச் செயலாளர் ‘புரட்சித் தமிழர்' அண்ணன் எடப்பாடியார் அவர்களை, மீண்டும் தமிழ் நாட்டின் முதலமைச்சராக அமர்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ரத்தத்தின் ரத்தமான கழகத் தொண்டர்கள் ஒன்றிணைந்தார்கள். வெளியூரில் இருந்து மாநாட்டில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான வாகனங்களில் மதுரைக்கு வந்தவர்கள், மாநாட்டுத் திடலை வந்தடைய முடியாமல் திரும்பியவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டியதை அனைவரும் நன்கறிவார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இவ்வளவு பெரிய மாநாட்டை, பல லட்சக்கணக்கில் ஆண்கள், பெண்கள் என்று கழகத் தொண்டர்கள் கூடிய மதுரை மாநாட்டில் ஒரு சிறு அசம்பாவிதம்கூட நடைபெறாமல் மிகுந்த கட்டுப்பாட்டுடன், குடும்பம் குடும்பமாக வருகை தந்த மகளிரை பாதுகாப்புடன் பத்திரமாக திரும்ப ஊருக்கு அனுப்பி வைத்த நிகழ்வு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்டதாக ஒரு முதுமொழி உண்டு. பொய், பொறாமைக்கு சொந்தக்காரர்களான ஆளும் திமுக-வினர், மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டிற்கு தன்னெழுச்சியாகத் தொண்டர்கள் திரண்டதைக் கண்டு பொறாமை கொண்டு, அண்ணன் எடப்பாடியாரின் சொந்த மாவட்டமான சேலத்தில் திமுக-வின் இளைஞரணி மாநாடு நடத்துவோம் என்று அறிவித்தனர். இரண்டு முறை தள்ளி வைத்த ‘ஒரங்க' மாநாட்டு நாடகம் நேற்று (21.1.2024) தோல்விகரமாக நடந்து முடிந்திருக்கிறது.

jayakumar

திமுக-ஆட்சியாளர்களின் ஏமாற்று வித்தைகளைப் புரிந்துகொண்ட மக்கள், இந்த மாநாட்டை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது தெரிகிறது. சேலம் திமுக இளைஞர் அணி மாநாட்டில் ஓரிரு குடும்பத்தைத் தவிர, திமுக-வின் மூத்த தலைவர்களின் குடும்பங்கள்கூட வரவில்லை என்பது கண்கூடு. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே மகளிர் வந்துள்ளதாக செய்திகள் தெரிய வருகின்றன. ஏனெனில், சென்னை விருகம்பாக்கத்தில் மகளிர் அணி நடத்திய கூட்டத்தில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலருக்கு ஏற்பட்ட நிலை திமுக மகளிர் அணியினரின் மனக் கண்ணில் வந்ததோ? என்னவோ? தெரியவில்லை. உலக முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சியைப் போன்றே, 20.1.2024 அன்று மாலை திமுக-வின் மாநாட்டில் தொண்டர்களைக் கவர்ந்திழுக்க கவர்ச்சி நடனம் நடத்தியும், நிகழ்ச்சிக்குப் போதுமான அளவு கூட்டம் சேர்க்க முடியாமல் ஆளும் தரப்பு தடுமாறிப் போயுள்ளது. ஆட்சி, அதிகாரம், பணபலம், அரசு இயந்திரம் அனைத்தையும் பயன்படுத்தி, கடந்த 32 மாதங்களில் கொள்ளை அடித்த பணத்தில் பல கோடிகளை அள்ளி வீசி ஒரு லட்சம் பேரைக்கூட திரட்ட முடியாத படுதோல்வி மாநாடாக சேலம் திமுக இளைஞர் அணி மாநில மாநாடு முடிந்திருக்கிறது.

jayakumar

சடங்கு சம்பிரதாயம் போல, 25 தீர்மானங்கள் என்ற பெயரில் அப்பன் முதுகை மகன் தட்டுவதும், மகனை ஆரத்தழுவி அப்பன் உச்சி முகர்வதும் என்று நகைச்சுவை ஸ்க்ரிப்ட் எழுதப்பட்டுள்ளது. மகளிர் நலனுக்காக (விடியல் பயணம்) ஒரு தீர்மானம்: இரு நாட்களுக்கு முன்பு பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கருணாநிதியின் மகனும், மருமகளும், தங்கள் வீட்டில் வேலை பார்த்த, மருத்துவக் கல்விக் கனவோடு இருந்த தலித் மாணவியை சித்ரவதை செய்து அவமானப்படுத்தியதை நாடெங்கும் உள்ள மக்கள் பார்த்து வெட்கித் தலை குனிந்துள்ளனர். அனைவரது கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு வழக்கம்போல் விடியா திமுக அரசின் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இவ்வளவு நவீன காலத்திலும், அவர்கள் தலைமறைவாகி உள்ளனர் என்று சொல்வது வெட்கக்கேடானது. இதில் ஒரு மாநாடு, அதற்கு ஒரு தீர்மானம். ‘மாநாடு நடத்த அனுமதி அளித்ததற்கு ஜனநாயகப் பாதுகாவலர் ஸ்டாலினுக்கு நன்றி’ என்று ஒரு தீர்மானம்: ஆளும் கட்சிக்கு மாநாடு நடத்த அனுமதி! எவ்வளவு பெரிய ஜனநாயகம். அரசின் தவறுகளை ஜனநாயக முறையில் சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் மீது FIR, உடனடியாகக் கைது, வழக்கு, சிறை என்று ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு ஜனநாயகப் பாதுகாவலர் பட்டம். இத்தீர்மானம் மிகவும் வெட்கக்கேடானது.

MKstalin jayakumar

'முதன்மை மாநிலமாக்க அயராது பாடுபட்ட முதல்வருக்கு துணை நிற்போம்' என்று ஒரு தீர்மானம்: விடியா திமுக அரசு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் முதன்மை இடம் என்ற பெருமையை பெற்றுத் தந்த நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சருக்குத் துணை நிற்பதாக வெட்கக்கேடான ஒரு தீர்மானம். ‘உரிமைத் தொகை' தீர்மானம்: திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பப் பெண்களுக்கும் உதவித் தொகை என்று அறிவித்துவிட்டு, சுமார் 2.25 கோடி அரிசி கார்டுகள் உள்ள நிலையில், 1.15 கோடி மகளிருக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்கியுள்ளோம் என்று தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று பட்டவர்த்தனமாக ஒப்புக்கொண்டதற்கு இத்தீர்மானத்தை பெண்களே நகையாடுகிறார்கள். ஒரு தீர்மானம். எள்ளி 'காலை உணவுத் திட்டம்' தீர்மானம்: ஏற்கெனவே, எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபொழுது, குறிப்பிட்ட சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இத்திட்டம் பரிட்சார்த்த முறையில் அமுல்படுத்தப்பட்டது. 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று நோயைத் தொடர்ந்து, ஓராண்டுக்கும் மேல் கல்வி நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அண்ணன் எடப்பாடியார் அமுல்படுத்திய இத்திட்டத்திற்கு விடியா திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி தைரியமாக நன்றி தெரிவிக்கும் தீர்மானம். ‘மக்களைத் தேடி மருத்துவம்’ தீர்மானம்: விடியா திமுக அரசின் 32 மாதகால ஆட்சியில் சுகாதாரத் துறை செயலிழந்து உள்ளதுதான் சாதனை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வரலாறு காணாத அளவு எழுச்சியைக் கண்டது மக்கள் நல்வாழ்வுத் துறை. 11 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசின் அனுமதி பெற்று, மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளைத் திறந்தோம். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்காக கிராமங்கள், நகரங்களில் 2000 அம்மா மினி கிளினிக்குகளைத் திறந்தோம். அவற்றை மூடிய சாதனையைத் தவிர, இந்த விடியா அரசு வேறு எதையும் மருத்துவத் துறையில் செய்யவில்லை. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக் கணினி திட்டத்தை நிறுத்திய சாதனையும் இந்த விடியா திமுக அரசை சாரும். ‘பொங்கல் பரிசுக்கு நன்றி' தீர்மானம்: 2022-ஆம் ஆண்டு தை மாதம் உருகிய வெல்லம், இறந்து கிடந்த பல்லியுடன் புளி, பப்பாளி விதை கலந்த மிளகு, சிறு வண்டுகளுடன் ரவை, கோதுமை, என்று பொதுமக்கள் பயன்படுத்த முடியாத 19 மளிகைப் பொருட்களை வழங்கி, அந்த ஆண்டு தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட முடியாத சாதனையை நிகழ்த்தியது இந்த விடியா திமுக அரசு.

jayakumar

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடும் எதிர்ப்பிற்குப் பிறகு 2023-ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக 1,000/- ரூபாயை அறிவித்தது. இந்த 2024-ம் ஆண்டு பொங்கல் தொகுப்பை அறிவித்த விடியா திமுக அரசு, அண்ணன் எடப்பாடியாரின் அறிக்கைக்குப் பிறகு ரூ. 1,000/-த்தை பொங்கல் பரிசாக முதலில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் அறிவித்தது. கடுமையான கண்டனங்களுக்குப் பிறகு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு என்று மூன்றாவது அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில், லட்சக்கணக்கான அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசை வாங்காத நிலையில், 15.1.2024-ஆம் தேதியுடன் பொங்கல் பரிசு வழங்குவது நிறுத்தப்பட்டதாக அறிவித்தது. சுமார் 20 சதவீத பொங்கல் பரிசுப் பணத்தை பெறாதவர்கள் உள்ள நிலையில், பொங்கல் பரிசு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து இப்படி ஒரு வெட்கக்கேடான தீர்மானத்தை இயற்றி உங்களை பெருமைப் படுத்திக்கொள்கிறீர்கள். இது வெட்கக்கேடானது. ‘மக்களை காத்த முதல்வருக்கு நன்றி' தீர்மானம்: கடந்த ஆண்டு டிசம்பரில், மிக்ஜாம் புயலை ஒட்டி பெய்த கனமழையின்போது அதிகக் காற்று இல்லை. அதிகமான மரங்கள் காற்றினால் சாயவில்லை; மின் கம்பங்களுக்கு பாதிப்பில்லை. ஆனால், இதைக்கூட சமாளிக்க இயலாத நிர்வாகத் திறமையற்ற விடியா திமுக அரசு, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால், சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள சாலைகளில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் பெருமளவு பாதிப்படைந்தனர். மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரை மின்சாரம் இல்லாமல், அடிப்படை வசதிகள் இன்றி, தண்ணீர் இல்லாமல் துன்புற்ற மக்களைப் பற்றி பட்டத்து இளவரசருக்குத் தெரியவில்லை என்பது இந்தத் தீர்மானத்தின் மூலம் நன்கு விளங்குகிறது. இதுவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் 2011-ல் தானே புயல், 2015-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பரில் கன மழை, 2016-ல் வர்தா சூறாவளிப் புயல், 2018-ல் கஜா புயல், நவம்பர் 2020-ல் நிவர் புயல், டிசம்பர் 2020-ல் புரெவி புயல் என்று 5 புயல்கள் மற்றும் பல கன மழைகளை சந்தித்தோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உணவு, உடை, அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. அம்மா உணவகங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்பட்டது. ஆனால், விடியா திமுக அரசு சென்ற ஆண்டு டிசம்பர் மாத கன மழையின்போது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், தமிழக மக்களை தவிக்கவிட்டதற்கு, விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றியது வெட்கக்கேடானது. 'உயிர் பலி கேட்கும் நீட் தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும்’ தீர்மானம்: காங்கிரசும், திமுக-வும் மத்தியில் நடத்திய கூட்டணி ஆட்சியில், திரு. குலாம் நபி ஆசாத்தும், திமுக-வின் திரு. காந்திசெல்வனும் மந்திரிகளாக இருந்து போட்ட விதை, இன்று விஷ விருட்சமாக மாறி, பல அப்பாவி மாணவ, மாணவிகளின் உயிரிழப்புக்குக் காரணமான நீட் தேர்வை ஒழிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றியது கொலை பாதக நாடகமாகும். நாடகத்தின் புதிய பரிணாமமாக நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து அட்டைகள் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கையெழுத்துகள் வாங்கிய அட்டைகள் மாநாட்டில் காற்றில் பறந்ததையும், மாநாட்டு அரங்கம் முழுவதும் குப்பையோடு குப்பையாக கலந்து இருந்ததையும் சமூக ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. இப்படி கிடந்த கையெழுத்து அட்டைகளை டெல்லிக்கு அனுப்புவோம் என்று மேலும் ஒரு நாடகம். இத்தீர்மானத்தைப் பார்க்கும் போது, ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

jayakumar

"மாநில உரிமை மீட்பு மாநாடு' - காவிரி நீர் உரிமை முதல், கச்சத் தீவு உரிமை வரை அனைத்தையும் பறிகொடுத்த தி.மு.க. என்ற பெயரில், தங்களின் கொள்ளை அடிக்கும் உரிமை மீட்கப் போராடுகிறார்கள் என்று, இந்த மாநாட்டின் தீர்மானங்களை கேட்ட மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். ஆளுநர் பதவி என்ற தொங்கு சதையை நிரந்தரமாக அகற்றுவது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தீர்வு என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது என வாய்ஜாலம் காட்டப்பட்டுள்ளது. ஏறத்தாழ, 18 ஆண்டு காலம் மத்தியில் காங்கிரசோடும், பா.ஜ.க-வோடும் மாறி, மாறி ஆட்சியில் இருந்த போது, ஆளுநர் பதவிகளை ஒழிக்காமல் இருந்துவிட்டு, இப்போது ‘குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்வது போல்' பாய்வது விந்தையானது. 66 “அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளை கைப்பாவையாக்கி பா.ஜ.க-வை எதிர்க்கின்ற மாநிலக் கட்சிகள் மீது வழக்குகளைப் பாய்ச்சுகின்ற மத்திய அரசைக் கண்டிக்கிறோம்” என்ற தீர்மானத்தின் மூலம், திட்டம் போட்டுத் திருடும் கூட்டம் தங்கள் முகமூடியை தாங்களே கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டுள்ளனர். ஊழலுக்காக மூன்றாண்டுகள் சிறை தண்டனைப் பெற்று பதவி இழந்த ஒரு மந்திரி; சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கி, பெயில் கிடைக்காமல் ஜெயிலில் இருக்கும் இலாகா இல்லாத மற்றொரு மந்திரி; சிறைக்குப் போகக் காத்திருக்கும் மேலும் சில மந்திரிகள், கொள்ளையடித்த 30,000 கோடியை பாதுகாப்பது எப்படி என்று தவிக்கும் மகன், மருமகன் ஆகியோரின் தில்லு முள்ளுகளை சேலத்தில் நடத்திய கபட நாடகங்கள் மூலம் மறைத்துவிடலாம் என்று திரு. மு.க. ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார். செல்லலாம். தமிழக இப்படி, ஒவ்வொரு தீர்மானத்தையும், அதில் உள்ள குறைகளையும் அடுக்கிக்கொண்டே மக்கள் விழிப்படைந்துவிட்டனர். விழிப்படைந்ததோடு, கொதிப்படைந்தும் போயுள்ளனர். மக்கள் விரோத இந்த தில்லு முல்லு திமுக-விற்கு, வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற உள்ளதாகக் கூறி, மாநிலம் முழுவதும் திமுக மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் அனைவரும் அவரவர் பகுதிகளில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள், வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்களிடமும் வசூல் வேட்டை நடத்தி உள்ளனர். குறிப்பாக, பல இடங்களில் தனியார் மருத்துவமனைகளிலும் வசூல் வேட்டை நடத்தியதுதான் இந்த மாநாட்டின் சாதனை என்று பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர்.

jayakumar

நேற்று (21.1.2024), மாநாட்டில் முதலமைச்சரும், உதயநிதியும் பேசும்போது, பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்ததை ஊடகங்களும், சமூக ஊடகங்களும் தெளிவாகக் காட்டின. மேலும், உதயநிதி அவர்கள் பேசும்போது, மாநாட்டுப் பந்தலிலே திமுக நிர்வாகிகள் காசு வைத்து சீட்டு ஆடியதுதான் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இளைஞர் அணியின் மாநில மாநாட்டின் சிறப்பம்சம் என்று அனைவரும் திமுக மாநாட்டை (பெருமையுடன்) பேசுகின்றனர். தம்பி சின்ன உளறலுக்கு ஒரு எச்சரிக்கை. மூத்தவர்களையும், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களையும் கேலி பேசுவதை நிறுத்தக்கொள்ள வேண்டும். உலகம் சிறியது. பூமராங் போல் நீங்கள் விதைத்ததை, நீங்களே அறுவடை செய்ய நேரிடும் என்பதை நினைவில் கொள்ளவும். அண்ணன் எடப்பாடியாருக்கு கால்வலி குறித்து தலைசிறந்த வைத்திய நிபுணராக நீங்கள் பேட்டி அளித்திருந்தீர்கள். அப்படி, தலைசிறந்த வைத்திய நிபுணரான நீங்கள், உங்கள் தந்தையார் பொது நிகழ்ச்சிகளில் பேசும்பொழுது கை நடுங்குவதையும், நா குழறுவதையும் தடுக்க உடனடியாக வைத்தியம் பார்த்தால் மிகவும் நல்லது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற கழக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டைப் போல், தன் தனயனுக்காக 21.1.2024 அன்று ஒரு குடும்ப மாநாட்டை சேலத்தில் நடத்தி, தங்களைத் தாங்களே மகிழ்வித்துக்கொள்ளும் இந்த சேலம் திமுக இளைஞர் அணி மாநில மாநாடு அனைத்து விதங்களிலும் தோல்வியில் முடிந்துள்ளது என்றால் அது மிகையல்ல என்று தெரிவித்துள்ளார்.