தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜயின் பகல் கனவு : ஜெயக்குமார் விமர்சனம்..!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் தளத்தில் பரபரப்பாக இயங்கி வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான். கட்சியின் முதல் மாநாட்டை முடித்த கையோடு தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையும் நடத்தி முடித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் என அடுத்தாண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கவுள்ளது.
இந்த நிலையில், அவர்கள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள். எத்தனை சதவிகிதம் வாக்குகளைப் பெற வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில பரபரப்பு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரசாந்த் கிஷோர் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:-
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வருகிறார். அதனால் அவருடைய கருத்தை அவர் கூறுகிறார். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக-வுக்கு மாற்று அதிமுகதான். புதிதாக கட்சி தொடங்கியவர்கள் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த அடுத்து நம்ம ஆட்சி என்று சொல்வது வழக்கம்தான். இது அவர்களின் ஜனநாயக உரிமை.
தமிழ்நாடு முழுவதும் திமுக ஆட்சிக்கு எதிரான அலை உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் இருந்து புலம்பல்கள் வெளிவரத் துவங்கியுள்ளது. மகத்தான தலைவர் எம்.ஜி.ஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது; விஜய்-எம்.ஜி.ஆர். ஆக முடியாது. யார் வேண்டுமானாலும் கனவு காணலாம்; விஜய் அவர் ஆசையை பேசியிருக்கிறார்.
நடிகர் விஜய் போலவே மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கும் கனவு இருக்கும்; பாஜகவின் பகல் கனவு பலிக்காது. மும்மொழிக் கொள்கையை திணிப்பதை அதிமுக ஏற்கவில்லை; மாநில அரசுக்கு நிதி தர மறுப்பதை ஏற்கமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.