ஜெயக்குமார் வழக்கு- எரிந்த நிலையில் டார்ச் லைட் மீட்பு

 
ஜெயக்குமார்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடைசியாக வாங்கிய டார்ச் லைட் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

tn

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ம் தேதி தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  இதற்கு முன்பாக இவரது மகன் தனது தந்தையை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் . அத்துடன் எனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர் . அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று நான்கு பக்கங்கள் கொண்ட புகார் ஒன்றை ஜெயக்குமார் நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுத்ததும் தெரியவந்தது. ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . அத்துடன் ஜெயக்குமார் மரணம் தற்கொலை அல்ல என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடைசியாக வாங்கிய டார்ச் லைட் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து டார்ச் லைட் மீட்கப்பட்டுள்ளது. முழுவதும் எரிந்த நிலையில் டார்ச் லைட் மீட்கப்பட்ட நிலையில் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயக்குமார் டார்ச் லைட் வாங்கிய சிசிடிவி காட்சிகள் 3 தினங்களுக்கு முன்பு வெளியானது. 
ஜெயக்குமார் எந்த பதற்றமும் இன்றி டார்ச் லைட் வாங்கி சென்றதாக கடை உரிமையாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.