"என் நிலத்த காப்பாத்தி கொடுங்க முதல்வர் ஐயா.."- போயஸ் தோட்டத்தில் பிரபல நடிகை கதறல்
தமிழக முதலமைச்சரை 20 முறை சந்திக்க முயற்சி செய்தும், பலன் இல்லை என பழம்பெரும் நடிகை ஜெயசித்ரா தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள பழம் பெறும் நடிகை ஜெயசித்ரா தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர், இவர் தன்னுடைய நிலம் தொடர்பான பிரச்சனையை தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும் என செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வரிடம் நேரடியாக ஒரு விண்ணப்பத்தை வைப்பதற்காக தான் இந்த செய்தியாளர் சந்திப்பு. செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் தனக்கு ஒரு இடம் இருக்கிறது. 1976 ஆம் ஆண்டு தன்னுடைய தாய் இந்த இடத்தை வாங்கி கொடுத்தார்.
இதனை அடுத்து 1978 ஆம் ஆண்டு லேபர் வெல்ஃபேர்ட் போர்ட் அதனை கையகப்படுத்தி விட்டது. அந்த இடத்தில் ஜவஹர்லால் நேரு ஹாஸ்டல் கட்டுவதற்காக இந்த இடத்தை எடுத்துக் கொண்டது. இந்த இடத்தை பொறுத்தவரை மூன்று உரிமையாளர்கள் இருக்கிறார்கள். இரண்டு உரிமையாளர்கள் அப்பொழுது அவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த தொகையை பெற்றுக்கொண்டு இடத்தை கொடுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு வழங்கிய அந்த காம்பன்சேஷன் தொகையான 26 ஆயிரம் ரூபாயை தான். நான் அதனை பெற்றுக் கொள்ளவில்லை. என்னுடைய நிலம் எனக்கு வேண்டும் என்கிற காரணத்தினால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த விவகாரத்தில் மட்டும் பல வழக்கறிஞர்கள் கையாண்டு சோர்ந்து விட்டார்கள். குறிப்பாக பலமுறை தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து இந்த இடம் தொடர்பான பிரச்சனையை எடுத்துச் சொல்ல வேண்டும் என முயற்சி செய்தும் பல அதிகாரிகளை சந்தித்து மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பியும் தமிழக முதலமைச்சரை சந்திக்க முடியவில்லை. அந்த இடத்தில் நான் வளர்த்த தென்னை மரம் கூட வெகு விரைவாக வளர்ந்து விட்டது. ஆனால் அந்த இடம் இன்னும் சும்மாவே தான் இருக்கிறது. தற்பொழுது தமிழக முதலமைச்சர் பல நபர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்த இடப்பிரச்சனையும் அவருடைய கவனத்துக்கு சென்றால் நிச்சயம் உதவி செய்வார் என நம்புகிறேன். என்னுடைய தாய் அந்த 72 சென்ட் இடத்தை எனக்காக வாங்கி கொடுத்தார். ஒரு சென்டிமென்டாக தான் அந்த இடத்தை இதுவரை நான் விற்காமல் இருந்து வருகிறேன். கிட்டத்தட்ட 20 முறை தமிழக முதலமைச்சரை சந்திக்க முயற்சி செய்தும், இதுவரை எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டும், அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், திரை உலகம் வேறு அரசியல் வேறு. இந்த நிலம் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஒரு நல்வழி தனக்குத் தருவார் என நம்புகிறேன்” எனக் கூறினார்

