கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தனியார் மயமாக்க கூடாது - ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

 
jawahirullah

புகழ்பெற்ற கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தனியார் மயமாக்க கூடாது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். 

இது தொட்டர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல் பட்டு வரும் அரசு மனநல மருத்துவ மனையைத் தனியார் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல வலியுறுத்தி சமீபத்தில் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலாளர் அவர்கள் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி 
இயக்குநருக்குக் கடிதம் அனுப்பி இருப்பதாகத் தெரிய வருகிறது. மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை தமிழ்நாடு அளவில் அளப்பரிய சேவையை வழங்கி வருகிறது. கீழ்ப்பாக்கம் என்றாலே இம்மருத்துவமனைதான் அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு இம்மருத்துவமனை புகழ் பெற்றுள்ளது.

கீழ்ப்பாக்கம் மனநல காப்பக நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு!

நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான புற நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியும் 800க்கும்  மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு மனநல மருத்துவம் வழங்கியும் தொண்டாற்றி வரும் இம்மருத்துவமனையை தனியாருக்குத் தாரை வார்ப்பது ஏற்புடையது அல்ல. மக்கள் நலனுக்கு எதிரானது. மேலும் இம் மருத்துவமனையின் உட்கட்டமைப்பினையும் வசதிகளையும் மேம்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளாமல் கம்பெனி சட்டத்தின் கீழ் இயங்கும் 
மருத்துவமனையாக மாற்றுவதற்கான  முன்னெடுப்புகளைத் தயாரிக்க ஒரு சிறப்பு அலுவலரை நியமனம் செய்தும்  சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் 
எழுதி இருப்பதாகக் கூறப்படுகின்றது. 

ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் செயலாற்றி வரும் மருத்துவமனையை தனியார் மயமாக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்.  நிதிச் சுமை மற்றும் கட்டமைப்பு காரணங்களைக் காட்டி கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையைத் தனியாரிடம் ஒப்படைக்கும் மக்கள் விரோதத் திட்டத்தைத்  தமிழ்நாடு 
அரசு கைவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.