பட்டிலின இளைஞர்கள் மீது சாதி வெறி தாக்குதல்- ஜவாஹிருல்லா கண்டனம்

பட்டிலின இளைஞர்கள் மீது சாதி வெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லை மாவட்டம் மணிமுத்தீஸ்வரம் பகுதியைச் சார்ந்த பட்டியலின இளைஞர்கள் இருவர் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு திரும்பிய போது 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தியும், இவர்கள் மீது சிறுநீர் கழித்தும் தாக்குதல் நடத்திய செயலுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன். அந்த கும்பல் இளைஞர் இருவரையும் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதோடு அவர்களிடமிருந்து அலைபேசிகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஏடிஎம் ரொக்க பணம் போன்றவற்றையும் பறித்திருப்பதாக தெரிகிறது. இதையடுத்து வன்கொடுமை வழக்கு, வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 6 பேரை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்த நவீன யுகத்திலும் சாதி வெறியின் பெயரால் நடத்தப்படும் தாக்குதல்களை ஒருபோதும் சகிக்க முடியாது. “இருட்டறையில் உள்ளதடா உலகம்- சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே” என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசனார். சாதி உணர்வை வளர்க்கும் ஃபாசிச சக்திகள் தமிழ்நாட்டில் செய்துவரும் குழப்பங்களே பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளாக வடிவெடுக்கின்றன. இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி எப்போதும் நடைபெறாத வண்ணம் அரசு உறுதியான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.