மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி - அமைச்சர் மூர்த்தி சொன்ன முக்கிய தகவல்!!

 
moorthy


உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. மதுரையில் அவினியாபுரம்,  பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம் . அந்த வகையில் அவனியாபுரத்தில் ஜனவரி 14ஆம் தேதியும் , பாலமேட்டில் 15ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதற்காக 110 கிராமங்களில் 350க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்க தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

jalli

இந்த இந்த சூழலில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள முகூர்த்தகால் நிகழ்ச்சி நடைபெற்றது. வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாமல் இன்று முகூர்த்தக்கால் விழா நடைபெற்றது.  அரசு வழிகாட்டுதல்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்,  பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தலாம் என அரசு சொன்னால் அதன்படி போட்டிகள் நடத்தப்படும் என விழா குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர் கொரோனா மூன்றாம் அலையை கட்டுக்குள் கொண்டுவர பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.  தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரானை கட்டுப்படுத்த முதலமைச்சர் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். மதுரையில் மூன்றாம் அலையை எதிர்கொள்ள அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. மக்களுக்கு தற்போது விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதனால் மாவட்டம் முழுவதும் கிராமம் கிராமமாக சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு அளித்து வருகிறோம் என்றார்.

ttn

தொடர்ந்து பேசிய அவர்,  "மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும். ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து முதலமைச்சர் இன்று அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.  ஜல்லிக்கட்டு போட்டியை விதிமுறைகளை பின்பற்றி நடத்துவது குறித்து அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார்.  முதல்வரின் அறிவிப்பு வெளியானவுடன் போர்க்கால அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு தொடங்கப்படும். கடந்தகாலங்களில் போட்டி நடைபெறலாம் என்று அறிவித்த 24 மணி நேரத்தில் மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது" என்றார்.