ஜல்லிக்கட்டு காளையை தாய்மாமன் சீதனமாக வழங்கிய மாடுபிடி வீரர்!

 
Bull

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை சகோதரி இல்ல காதணி விழாவிற்கு தாய்மாமன் சீதனமாக வழங்கிய மாடுபிடி வீரரின் செயல் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

மதுரை: மாமன் சீராக மாட்டை பரிசளித்த மாடு பிடி வீரர்..உறவினர்கள் நெகிழ்ச்சி!

தென் மாவட்டங்களில் தாய்மாமன் சீதனம் வழங்குவது என்பது மரபு சார்ந்த ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. தனது சகோதரி இல்ல விழாவிற்கு தாய்மாமன் கொண்டு வரும் சீதனம் பெண்ணுக்கும் சரி ஆணுக்கும் சரி ஒரு கௌரவமாகவே கருதப்பட்டு சீதனம் வழங்கும் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்துவது இப்பகுதி மக்களின் வழக்கம். அந்த வகையில் அலங்காநல்லூரில் தனது சகோதரி இல்ல விழாவிற்கு ஜல்லிக்கட்டுக் காளையை சீதனமாக வழங்கி மாடு பிடி வீரர் அசத்தினார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் சரவணன். பட்டதாரி இளைஞரான இவர் இப்பகுதியில் புகழ்பெற்ற மாடுபிடி வீரராகவும் உள்ளார். இந்நிலையில் சரவணனின் சகோதரி இல்ல காதணி விழாவிற்கு தாய்மாமன் சீதனம் கொடுக்க திட்டமிட்ட சரவணன், தனது சீதனத்துடன் தான் ஆசை ஆசையாக 5 ஆண்டுகளாக வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையை சீதனமாக வழங்க முடிவு செய்தார். அதன்படி தனது வீட்டில் இருந்து தாய்மாமன் சீதன பொருட்களுடன் தான் வளர்த்த ஜல்லிக்கட்டையும் ஜோடித்து அலங்காரம் செய்து ஊர்வலமாக விழா நடைபெறும் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு மாடுபிடி வீரருக்கும், அவர் சீதனமாக கொண்டு வந்த ஜல்லிக்கட்டு காளைக்கும் ஆரத்தி எடுத்து விசேஷ வீட்டார் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் சீதனமாக தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை சகோதரி வீட்டிற்கு சரவணன் வழங்கினார். இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து வியந்தனர்..