முதல்வர் ஸ்டாலின் ட்வீட்டால் நன்மை... தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க இலங்கையிடம் மத்திய அமைச்சர் கோரிக்கை!

 
ஜெய்சங்கர்

ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து கடந்தாண்டு டிசம்பர் 18ஆம் தேதி 6 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்களை எல்லை தாண்டி சென்று மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வர மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இரண்டு முறை கடிதங்கள் எழுதினார். ஆனால் இலங்கை கடற்படையோ எதையும் கண்டுகொள்ளாமல் மேலும் 12 மீனவர்களை கைது செய்தனர். அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். ஆனாலும் இலங்கை அரசு பணிந்ததாக தெரியவில்லை. கிட்டத்தட்ட 1 மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 43 தமிழக மீனவர்களை ஜனவரி 27ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு மீனவர்களின் குடும்பத்தினரை மிகுந்த கவலை அடையச் செய்துள்ளது. 


இதுதொடர்பாக ட்வீட் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை டேக் செய்து, "இலங்கை சிறையில் உள்ள 43 மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. மீனவர்களை உடனே விடுவிக்க, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பதிவிட்டிருந்தார். இச்சூழலில் இன்று இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவுடன் காணொலி வாயிலாக அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை மேற்கொண்டார். இருதரப்பு உறவு குறித்து பேசிய ஜெய்சங்கர், மனிதாபிமான அடிப்படையில் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

EAM Dr. S. Jaishankar holds virtual meeting with Finance Minister of Sri  Lanka Basil Rajapaksa - TIMES OF UP

மேலும் பேசிய ஜெய்சங்கர், "இந்தியா எப்போதுமே இலங்கையுடன் துணைநிற்கும். கோவிட்1-9 தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் பிற சவால்களை சமாளிக்க அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும். நெருங்கிய நட்பு நாடு மற்றும் கடல்சார் அண்டை நாடு என்ற வகையில், இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய பொருளாதார தொடர்புகளால் ஆதாயமடைகின்றன” என்றார். இந்தியாவை பாராட்டிய பசில் ராஜபக்சே, துறைமுகங்கள், உள்கட்டமைப்பு, எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சாரம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல முக்கியத் துறைகளில் இலங்கையில் இந்திய முதலீடுகளை வரவேற்பதாக தெரிவித்தார்.