பிரபலமாகும் 'ஜெயில் சுற்றுலா' : கைதிகளின் வாழ்க்கையை அனுபவிக்க படையெடுக்கும் மக்கள்..!
இன்றைய காலகட்டத்தில் சுற்றுலா என்பது வெறும் இடங்களை சுற்றிப் பார்ப்பதாக மட்டும் இல்லாமல், புதிய வினோதமான அனுபவங்களை பெறுவதாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே சாகச சுற்றுலா, வரலாற்று சுற்றுலா ஆகியவற்றின் வரிசையில் தற்போது "இருண்ட சுற்றுலா" (Dark Tourism) என்றழைக்கப்படும் 'சிறை சுற்றுலா' உலகளவில் அதிவேகமாக பிரபலமடைந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள பல பழைய சிறைச்சாலைகள் தற்போது தங்கும் விடுதிகளாகவும், ஹோட்டல்களாகவும், சுற்றுலா தலங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.
சிறைச்சாலையின் பிரம்மாண்டமான தடிமனான சுவர்கள், இரும்புக் கம்பிகள், இருள் சூழ்ந்த சிறிய அறைகள் மற்றும் அங்குள்ள அச்சமூட்டும் சூழல் ஆகியவை சுற்றுலா பயணிகளின் ஆர்வத்தை வெகுவாகத் தூண்டுகின்றன. ஒரு காலத்தில் பயங்கர குற்றவாளிகள் வாழ்ந்த அதே சூழலில் தங்கி, கைதிகளின் அன்றாட வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நேரடியாக அறிந்து கொள்ள பயணிகள் விரும்புகின்றனர். சிலர் வரலாற்றை தெரிந்துகொள்ளவும், வேறு சிலர் சமூக ஊடகங்களுக்காக தனித்துவமான உள்ளடக்கங்களை (Social Media Content) உருவாக்கவும் இந்த சுற்றுலாவை தேர்ந்தெடுக்கின்றனர்.
சுற்றுலா பயணிகளின் இந்த வினோத மோகத்தை புரிந்துகொண்டு, பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் மாநில அரசுகளும் தங்களின் பழைய சிறைச்சாலைகளை சுற்றுலா தலங்களாக மாற்ற அனுமதி வழங்கி வருகின்றன. கைதிகள் அனுபவித்த தண்டனைகள் மற்றும் சிறை வளாகத்தின் சுவாரசியமான பின்னணிகளை மக்கள் நேரடியாக காணப் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சில புகழ்பெற்ற பழைய சிறைகளில் தங்குவதற்கு கட்டணம் அதிகமாக இருந்தாலும், மக்கள் சில மாதங்களுக்கு முன்பே 'அட்வான்ஸ் புக்கிங்' செய்து காத்திருப்பதுதான் தற்போதைய ட்ரெண்ட்.
இந்தியாவிலும் இந்த சிறை சுற்றுலா கலாச்சாரம் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக உத்தரகாண்ட் மாநில மத்திய சிறை, மகாராஷ்டிராவின் எரவாடா மத்திய சிறை, கர்நாடகாவின் பெலகாவி மத்திய சிறை மற்றும் தெலுங்கானாவின் ஹைதராபாத் சங்கரெட்டி சிறை ஆகியவை இந்த திட்டத்தை செயல்படுத்தி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தச் சிறைகளில் பொதுமக்கள் தங்கி செல்வதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளும் சிறைத்துறையால் வழங்கப்படுகின்றன.
இந்தச் சிறைகளில் ஒரு நாள் தங்கி கைதி வாழ்க்கையை அனுபவிக்க வெறும் 500 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த தொகையை செலுத்தி உள்ளே செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு, நிஜக் கைதிகளை போலவே ஒரு கைதி எண், பாரம்பரிய கதர் உடை மற்றும் அவர்கள் தங்குவதற்கான பிரத்யேக சிறை அறை எண் ஆகியவை ஒதுக்கப்படுகின்றன. மேலும், உணவு உண்பதற்காக அவர்களுக்கு வழக்கமான அலுமினிய தட்டுகளும் வழங்கப்படுவது இந்த அனுபவத்தின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது.
சிறைக்குள் செல்லும் சுற்றுலா பயணிகளை அந்த ஒரு நாள் முழுவதும் அதிகாரிகள் நிஜக் கைதிகளை போலத்தான் நடத்துகிறார்கள். அவர்கள் வழங்கும் மூன்று வேளை ஜெயில் உணவை உண்டு, இருள் நிறைந்த அறைக்குள் கைதியாகவே வாழ வேண்டும். ஒரு நாள் முழுக்க நிஜக் கைதியின் வாழ்க்கையை மிக அருகில் இருந்து உணரும் இந்த வித்தியாசமான மற்றும் சிலிர்ப்பான அனுபவத்தை பெற, தற்கால இளைஞர்களும் சுற்றுலா பிரியர்களும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சிறைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

