"முதல்வரையும்,பெண்களையும் யாரும் ஒருமையில் பேசக் கூடாது"- ஜெகதீஸ்வரி
திருநெல்வேலியில் அரசு அங்கன்வாடிப் பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி, குழந்தைகளின் கையைப் பிடித்து ஆரம்பக் கல்வியைத் தொடங்கி வைத்தார். பின்னர், பள்ளி மாணவ, மாணவியருக்குச் சீருடைகள், பென்சில்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, "முதலமைச்சர் குறித்து தி.மு.க நிகழ்ச்சியில் பெண் கவுன்சிலர் அவதூறாக பேசும் போது சிரித்து ரசித்த மேயர் பிரியாவும், கண்டுகொள்ளாமல் இருந்த கனிமொழியையும் கண்டிக்கிறேன். இனி இது தொடர்ந்தால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பெண்களும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பார்கள். குலசேகரப்பட்டினம் தசரா விழாவுக்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு 50% கூடுதலாக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மகளிரையும், முதல்வரையும் இழிவாகப் பேசும் திமுகவினரைத் தமிழக மகளிர் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். திமுக கவுன்சிலர் சுதா மீது சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை" என்றார்.

