விரைவில் ஜெயலலிதா வீட்டில் குடியேறுவேன் - ஜெ.தீபா
தான் மீண்டும் அரசியலுக்கு வருவது கடவுள் கையில் தான் இருப்பதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது கணவர் மாதவனுடன் சென்னை பசுமைவழிசலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்தார்.
சுமார் 20 நிமிட சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா, தனக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அரசியல் தாண்டி பரிச்சயம் உள்ளதாகவும், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தனது மகளின் பெயர் சுட்டும் விழாவில் கலந்துக்கொள்ள நேரில் அழைப்பு விடுக்க வந்ததாக கூறினார். அதிமுகவில் நடக்கும் பிரச்சனை மேலோட்டமாக தான் தெரியும் எனவும் அரசியலுக்கு அப்பாற்பட்டவளாக கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். சசிகலா மீது சொன்ன எந்த குற்றச்சாடுகளிலும் மாற்றமில்லை என தெரிவித்த ஜெ.தீபா, அவை அனைத்தும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயங்கள் எனக் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தில் எப்போது குடியேறுவீர்கள் என்ற கேள்விக்கு, வீடு பாழடைந்துள்ளதாகவும், புனரமைக்கும் வேலைகள் முடிந்தவுடன் குடியேறுவேன் என தெரிவித்தார். எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என கேட்டதற்கு, Man proposes god disposes என்பது போல நாம் முடிவு எடுப்பது போல் நடப்பதில்லை. அரசியலுக்கு வருவது கடவுள் கையில் உள்ளது என கூறினார்.


