பெரும் சோகம்..!!பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 2 குழந்தைகள் பலி..!!
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெர்காம்பூர் பகுதி பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு கார் ஒன்று நேற்று காலை சென்றது.
திறந்து கிடந்த கர்னசுபர்னா ரயில்வே கிராசிங்கை காலை 7:00 மணிக்கு கார் கடந்தபோது, நிம்திதா – கட்வா பயணியர் ரயில் பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலும் நொறுங்கியது.
அதில் இருந்த 2 மாணவர்கள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; மேலும் பல மாணவர்கள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு முர்ஷிதாபாத் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது: கர்னசுபர்னா ரயில்வே கிராசிங்கை பள்ளி கார் கடப்பதற்கு முன் ஒரு ரயில் வந்தது. இதற்காக மூடப்பட்டிருந்த ரயில்வே கேட் அந்த ரயில் சென்றதும் திறக்கப்பட்டது. அதே நேரத்தில் மற்றொரு தண்டவாளத்தில் வந்த ரயில், பள்ளி வேன் மீது மோதியது. கேட் கீப்பரின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விபத்தை அடுத்து கேட் கீப்பர் மற்றும் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

