ஒரே அருவருப்பா இருக்கு..! டியூட் படத்தை கடுமையாக விமர்சித்த திரௌபதி திரைப்பட இயக்குநர் மோகன் ஜி..!
பழனி முருகன் கோயிலில் செய்தியாளர்களிடம் பேசிய திரௌபதி திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, “திரௌபதி திரைப்படத்தின் 2 ஆம் பாகம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. அந்த படம் முழுக்க முழுக்க வரலாற்று திரைப்படமாக இருக்கும். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, இந்தி என 5 மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது. சேர, சோழ, பாண்டியர்களை போல ஒடிசாவில் இருக்கக் கூடிய போசனர்களை பற்றி இந்த படத்தில் பேசப்பட்டிருக்கும்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் 'டியூட்' படத்தின் மீது எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து கேட்டதற்கு, “முதல் பாதி படம் நன்றாக உள்ளது. ஆனால், அடுத்த பாதி சர்ச்சைக்குரிய வகையில் உள்ளது. முன்னாள் காதலனுடன் கல்யாணம் செய்து விட்டு, இந்நாள் காதலனுடன் எப்படி வாழ முடியும்? இதில் குழந்தைக்கு தொடர்பில்லாத முன்னாள் காதலனின் இனிஷியல் போட்டுக் கொள்வது ஏமாற்றும் செயல். நமது ஊரில் இதுபோன்ற கலாசாரங்கள் இல்லை. ஆகையால், இந்த படம் மக்கள் பார்ப்பதற்கு தகுதி இல்லாத படம்” என்றார்.
"டியூட் படத்தில் ஆணவ கொலை பற்றி பேசியிருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் புது காதலருக்கு பிறந்த குழந்தைக்கு இன்னொருவரின் இனிஷியல் போட்டு அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக தங்க அவர் வீட்டிலேயே அனுமதி கொடுப்பதை பார்க்கும்போது அருவருப்பாக இருக்கிறது.இப்படி ஒரு விஷயத்தை இயக்குநர் ஞாயப்படுத்தியிருப்பது தவறு. இந்தப் படம் அடுத்த தலைமுறைக்கு தவறான உதாரணம். இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்றுதான் கேட்க தோன்றுகிறது" என்றார்.
இதையடுத்து, பருவ மழையில் பயிர்கள் நனைந்து கொள்முதல் செய்யப்படாமல் இருப்பது குறித்து கேட்டதற்கு, “தமிழ்நாட்டில் 6 லட்சம் மெட்ரிக் டன் நெல் விளைவிக்கபட்டுள்ளது. ஆனால், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் கடந்த ஆட்சியாளர்களும், தற்போதைய ஆட்சியாளர்களும் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை பார்க்கவே மனது வலிக்கிறது. விவசாயிகளை நினைத்தால் கவலையாக உள்ளது” என்றார்.


