"காலில் ரத்தம் வர்ற அளவுக்கு மோசமா இருக்கு!" – கரூர் ஸ்டேடியம் பார்த்து கொந்தளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

 
1

விளையாட்டுத்துறை சார்ந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கரூர் ஸ்டேடியத்தை தான் நேரில் சென்று பார்வையிட்டதாகவும், அதன் நிலை குறித்தும் விளக்கினார்.

“1994இல் கட்டப்பட்ட நேரு ஸ்டேடியம் 30 ஆண்டுகளை தாண்டி நன்றாக உள்ளது. ஒரு திட்டம் கொண்டு வரும்போது அது 30 ஆண்டுகள் நிலைத்து இருக்க வேண்டும். வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் ஒரு திட்டத்தை உருவாக்கக்கூடாது. உதாரணத்திற்கு, கரூரில் போடப்பட்டுள்ள மினி ஸ்டேடியத்தின் டிராக்கில் விளையாட்டு வீரர்கள் ஓடினால் காலில் ரத்தம் வரும் அளவுக்கு தான் உள்ளது. எனவே இந்த ஸ்டேடியத்தை சீரமைக்க வேண்டும்.

திருநெல்வேலி, ராமநாதபுரம் கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி உள்ளடக்கிய தென் மாவட்டங்களில் விளையாட்டை மேம்படுத்த தனி கவனம் செலுத்தி வருகிறோம். பரமக்குடியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்கப்படும் என்று சொல்லியுள்ளோம்.

திருநெல்வேலியிலும் விளையாட்டு துறை சார்பில் சிறப்பு திட்டம் கொண்டுவர உள்ளோம். 3 முதல் 5 மாவட்டங்களை உள்ளடக்கி விளையாட்டு துறையை மேம்படுத்த திட்டம் வைத்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் வித்தியாசம் இருக்கும். தஞ்சாவூரில் இருக்கும் விளையாட்டு வீரருக்கும் திருநெல்வேலியில் இருக்கும் விளையாட்டு வீரருக்கும் வித்தியாசம் இருக்கும். அதற்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.