சோகம்..! தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை..! அமோனியா வாயு கசிவு பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு..!
திருவள்ளூரில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவை சேர்ந்த அஞ்சனா ஜூவாங்கா (25) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் சில தொழிலாளர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வந்த 'புனித பீட்டர் பால்' என்ற தனியார் கடல் உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் கடந்த 21-ஆம் தேதி நேரிட்ட பயங்கர அமோனியா வாயு கசிவு விபத்தின் கொடூரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வாயு கசிவு விபத்தில் சிக்கி, அங்கு பணியாற்றி வந்த வடமாநில பெண் தொழிலாளர்கள் உட்பட 74 பேர் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் மயக்கமடைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் ஏற்கனவே 16 பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஞ்சனா ஜூவாங்கா (25) என்ற பெண் தொழிலாளி, சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் சில தொழிலாளர்களின் நிலைமை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

