மீண்டும் எங்கள் ஆட்சி தான்.. இபிஎஸ் மீண்டும் முதல்வர் ஆவது உறுதி - அக்ரி கிருஷ்ணமூர்த்தி

 
1

சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சட்டமன்ற தேர்தலில் எங்கள் மாவட்டத்தில் அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றி கட்சியை வெற்றி பெற வைத்தோம். அந்தந்த மாவட்டங்களில் அவரவர்கள் ஒற்றுமையாகப் பணியாற்றியிருந்தால், நிச்சயமாக அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். தலைமை அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரையும் அழைக்கிறார்கள். அனைவருக்கும் பொறுப்பு வழங்குகிறார்கள். அனைத்து எம்.எல்.ஏ.க்களையும், எம்.பி.க்களையும் அழைத்தார்கள். மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரையும் அழைக்கிறார்கள்.

அனைவரையும் அழைக்கும் போது, அந்தக் கூட்டத்துக்கு வந்து தங்களுடைய வெற்றி வாய்ப்பை இழந்ததற்கான காரணத்தை சொல்ல வேண்டாமா? ஏன் அவர்கள் அந்தக் கூட்டத்துக்கு வரவில்லை? வந்து சொல்ல வேண்டும் அல்லவா? பொதுச்செயலாளரிடம் தங்களுடைய வெற்றி வாய்ப்பை இழந்ததற்கான காரணத்தை கட்சியில் உள்ள உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தெரிவிக்க முடியும். ஆனால், ஏன் அந்தக் கூட்டத்துக்கு இவர்கள் வரவில்லை? என்ன பயம்? ஏன் வரவில்லை?

அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் ஆகியோர் மீது குற்றம் சுமத்துவார்கள் என்று பயந்து அந்தக் கூட்டத்துக்கு வரவில்லை. பொதுச்செயலாளர் கூட்டிய கூட்டத்துக்கு வருவதற்கு உங்களுக்கு என்ன பயம்? ஏன் வரவில்லை? செய்த தவறுகளை மறைப்பதற்காக பொதுச்செயலாளர் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "திமுகவுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் எடப்பாடி பழனிசாமி நடத்தவில்லை. இது நூறு சதவீதம் உண்மை. எடப்பாடி பழனிசாமியின் முப்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிக்கு காரணம் பாமக என்று கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் உழைப்பும், கூட்டணிக் கட்சிகளின் பலமும் தான் வெற்றிக்குக் காரணம். பாமகவால் தான் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம் என்று சொன்னால், விழுப்புரத்தில் 2016-ல் இவர் போட்டியிட்டபோது ஏன் வெற்றி வாய்ப்பை இழந்தார்? எதனால் வெற்றி வாய்ப்பை இழந்தார்?" என்றும் சி.வி.சண்முகத்திற்கு எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இனி வருகின்ற உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மூலம் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை அமைக்கும்.

1996-ல் ஜெயலலிதா இருந்த போது கூட நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பிறகு எத்தனையோ மாற்றங்கள் நடந்திருக்கின்றன. வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. எப்போது தேர்தல் வந்தாலும், மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமையும். மீண்டும் அம்மாவின் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி அமைத்துத் தருவார்" எனத் தெரிவித்தார்.