இன்னும் 2 பெட்டிகள் தான்..! ராட்சத கிரேன் மூலம் அகற்றும் பணி தீவிரம்.. முதலில் 2 வழித்தடங்களை சீரமைக்க திட்டம்..
கவரைப்பேட்டையில் விபத்தில் சிக்கிய பாக்மதி விரைவு ரயிலின் பெட்டிகளை ராட்சத கிரேன் மூலம் தண்டவாளத்தில் இருந்து அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மைசூரு- தர்பங்கா பாகமதி விரைவு ரயில் இரவு 8.30 மணியளவில் பொன்னேரியை கடந்து கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்தபோது மெயின் லைனில் செல்வதற்கு பதிலாக, லூப் லைனுக்குள் நுழைந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் வேகமாக மோதியதால் ரயில் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன. இந்த ரயில் விபத்தில் 13 பெட்டிகள் தடம்புரண்டன.
நேற்று நள்ளிரவு வரை நடைபெற்ற மீட்புப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் தண்டவாளத்தில் புரண்டு கிடக்கும் ரயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 2 பெட்டிகள் மட்டுமே அகற்றப்பட வேண்டியுள்ள நிலையில், 150 டன் எடை வரை கையாளும் திறன் கொண்ட கனரக க்ரேன் கொண்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 4 வழித்தடத்தில் 2 வழித்தடம் மாலைக்குள் சீரமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக ஒரு அப்லைன் மற்றும் ஒரு அப் லூப் லைன் ஆகிய 2 வழித்தடங்களை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று இரவுக்குள் இந்த பாதைகளில் போக்குவரத்து சீராகும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மீதமுள்ள இரு பாதைகளில் நாளை காலைக்குள் போக்குவரத்தை சரிசெய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.