இது வெறும் லேப்டாப் அல்ல...எதிர்காலத்தை ஆள்வதற்கான வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்..!

 
1 1

 'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கி வைத்தார்.

புத்தாண்டுப் பொழுதை புத்துணர்வு மிக்க மாணவர்களுடன் தொடங்குவது மிகுந்த நேர்மறை ஆற்றலை அளிப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர், 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் மெகா திட்டத்தின் முதற்கட்டமாக இன்று 10 லட்சம் லேப்டாப்களை வழங்கினார். "உலகம் உங்கள் கைகளில்" என்பது வெறும் வாசகம் மட்டுமல்ல, மாணவர்களின் கைகளில் தான் இந்த நாட்டின் எதிர்காலமே உள்ளது என்பதை உணர்த்தவே இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், திராவிட மாடல் அரசு மாணவர்களை வளர்ப்பதன் மூலமே மாநிலத்தையும் நாட்டையும் வளர்க்க முடியும் என நம்புவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழகத்தின் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞர் கருணாநிதி தொலைநோக்குப் பார்வையுடன் கொண்டு வந்த ஐடி மற்றும் டைடல் பூங்கா கொள்கைகளே அடித்தளம் என்று முதல்வர் சுட்டிக்காட்டினார். திராவிட இயக்கம் என்பது அறிவுக்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் அறிவு இயக்கம் என்பதால், தமிழர்கள் எப்போதும் கடந்த காலப் பெருமைகளை மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், எதிர்காலப் பெருமைகளுக்காகவும் உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அறிவியலும் பகுத்தறிவும் மாணவர்களின் திறனுடன் இணையும்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாக இருக்கும் 'செயற்கை நுண்ணறிவை' (AI) மனித இனம் கண்டறிந்த "இரண்டாவது நெருப்பு" என்று வர்ணித்த முதல்வர், அதனை மாணவர்கள் தங்களின் வளர்ச்சிக்குச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மாற்றானது அல்ல, அது நமது வேலைகளை இன்னும் செம்மையாகச் செய்ய உதவும் ஒரு கருவி மட்டுமே என்றார். தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் ஊடுருவிவிட்ட நிலையில், அதனைப் புறக்கணிப்பது முட்டாள்தனமானது என்றும், முன்னேற்றத்திற்கான படிக்கட்டாக மாணவர்கள் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த லேப்டாப் திட்டம் என்பது அரசின் பார்வையில் ஒரு 'செலவுத் திட்டம்' அல்ல, மாறாக எதிர்காலத் தலைமுறையின் கல்வியில் செய்யப்படும் 'முதலீடு' என்று முதல்வர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மாணவர்கள் வெறும் பட்டம் வாங்குவதோடு நில்லாமல், உயர் பதவிகளை அடைய வேண்டும், சொந்தமாகத் தொழில் தொடங்கிப் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறினார். லேப்டாப்பை வெறும் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தாமல், வாழ்க்கையின் உயரத்தை எட்டுவதற்கான 'லாஞ்ச் பேட்' ஆக (Launch Pad) மாற்றிக்கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தின் பொருளாதாரம் தற்போது இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், உலகப் பத்திரிகைகள் தமிழகத்தைச் 'சூப்பர் மாநிலம்' எனப் புகழ்ந்து தள்ளுவதைக் குறிப்பிட்டார். பொங்கலுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்குவது போன்ற நலத்திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், உலகத்தரம் வாய்ந்த தொழிற்சாலைகளைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் இலக்கு என்றார். "நீங்களும் வெற்றி பெற்று வாருங்கள், நாங்களும் வெற்றி பெற்று வருகிறோம்; தமிழக அரசு என்றும் உங்களுக்குத் துணையாக இருக்கும்" என உறுதியளித்துத் தனது உரையை நிறைவு செய்தார்.

இலவச 'லேப்டாப்' பில் உள்ள வசதிகள் என்னென்ன?


* 14 மற்றும் 15 அங்குல திரையுடன், 'இன்டெல் ஐ3' மற்றும் 'ஏஎம்டி ரேடியான் 3 பிராசஸர்' இடம் பெற்றுள்ளன
 

* 8 ஜி.பி., ராம், 256 ஜி.பி., எஸ்.எஸ்.டி., சேமிப்பு திறன்
 

* விண்டோஸ் 11 மற்றும் பாஸ் லினக்ஸ் மென்பொருள் வசதி
 

* மாணவர்களின் கல்வி செயல்பாடுக்காக, எம்.எஸ்., ஆபீஸ் 365 வசதி
 

* செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்கு 'பெர்பிளெஸ்சிட்டி ப்ரோ' ஏ.ஐ., சந்தா 6 மாதம் இலவசம்.