இது கவரிங் அல்ல.. அசல் தங்கம்..! வருகிறது 'செயற்கை' தங்கம்..!
இந்தியாவில் பொதுவாக தங்கம் ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் தற்போது வரை மவுசு குறையாமல் இருக்கிறது. ஆனால், ஒரு காலத்தில் தங்கத்தை விட வைரத்திற்கு மவுசு அதிகமாக இருந்தது. அப்போது வைரம் வாங்குவது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், தற்போது வைரம் வாங்குவது கூட எளிதாகிவிட்டது. தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் எகிறி வருகிறது.
இந்த நிலையில், ஆய்வக வைரத்திற்கு இணையாக தற்போது செயற்கை தங்கம் வரவுள்ளதாக கூறப்படுகிறது. முதலில், சற்று மோசமாக தெரிந்த ஆய்வக வைரம், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தற்போது பார்ப்பதற்கு இயற்கை வைரம் போலவே இருக்கிறது. இதன் காரணமாக, ஆய்வக வைரம் மற்றும் இயற்கை வைரம் ஆகிய இரண்டுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரே மாதிரியாக இருக்கிறது.
முதலில், ஆய்வகத் தங்கம் என்பது சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படாது. மாறாக, அவை ஆய்வகங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இயற்கை தங்கத்துடன் வேதியியல் ரீதியாக ஒத்துப்போகும். அடர்த்தி, உருகு நிலை, கேரட் நிலைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். இவை ஆய்வகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் உருவாக்கப்படும். அதாவது இயற்கையாக தங்கம் எப்படி உருவாக்கப்படுமோ அதேபோலவே ஆய்வகத்தில் உருவாக்கப்படுகிறது. ஆனால், இது கவரிங் போன்று போலி தங்கம் இல்லை. 100% உண்மையான தங்கம் தான்.
இந்த செயற்கை தங்கம் இப்போது ஆய்வக சோதனையில் மட்டுமே உள்ளது. செயற்கை வைரத்தைப் போல கமர்ஷியல் உற்பத்திக்கு வரவில்லை. இதற்குப் பல ஆண்டுகளாகும் என்று கூறப்படுகிறது. இப்போது சோதனை முறையில் இருப்பதால், இது இயற்கை தங்கத்தை விட சற்று விலை அதிகமானதாகவே இருக்கிறது.
தூய்மையிலும் இது இயற்கை தங்கத்தைப் போலவே 24 கேரட் (99.9% தூய்மை) வரை சுத்திகரிக்கப்படலாம். அதை 22 கேரட் மற்றும் 18 கேரட் நகைகளாகவும் உருவாக்க முடியும். அடர்த்தி, வளைந்து கொடுக்கும் தன்மை, பளபளப்பு அனைத்தும் ஒரே மாதிரி இருக்கும். எனவே, செயற்கை தங்கத்துக்கும் இயற்கை தங்கத்துக்கும் வேறுபாடே இருக்காது.
பொதுவாக, தங்கம் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. தங்கம் என்பது குறிப்பிட்ட அளவு மட்டுமே இயற்கையில் உள்ளது என்பதாலேயே இந்தளவுக்கு அதன் மதிப்பு உச்சத்தில் இருக்கிறது. அதேநேரம் செயற்கை தங்கம் வந்துவிட்டால் இயற்கை தங்கத்தின் மதிப்பு சரியலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இது நடக்க குறைந்தது பல ஆண்டுகள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

