ஸ்கூல்ல இனி இது கட்டாயம்! - தமிழகப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட 'திடீர்' அறிவிப்பு..!
Apr 29, 2026, 05:30 IST1777420805000
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், "தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல், கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்குகிறது. மேலும் பருவநிலை மாற்றத்தினால் இந்த கோடை வெப்பத்தின் தாக்கமும் வெகுவாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
எனவே, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் மற்றும் மாணவர்கள், கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளவும் அறிவுரை வழங்கப்படுகிறது.
- அதிக வெய்யில் உள்ள நேரங்களில், பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை நேரடி வெய்யில்படும் திறந்த வெளியினை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- இந்நேரங்களில் மாணவர்களுக்கான வகுப்புகள், விளையாட்டுகள், உடற்பயிற்சி ஆகியவற்றை திறந்தவெளியில் நடத்தக் கூடாது.
- மாணவர்கள் தேவையான அளவு தண்ணீர் பருகுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- ஒவ்வொரு பாடவேளை தொடக்கத்தின்போதும் மாணவர்கள் நீர் அருந்த வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
- மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் குடிநீர் அல்லது பள்ளியில் பயன்பாட்டில் உள்ள குடிநீரை அவ்வப்போது பருக வேண்டும். பயணத்தின் போதும் குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும்.
- ஓ.ஆர்.எஸ் மற்றும் வீட்டில் தயார் செய்த எலுமிச்சைச் சாறு, நீர்மோர், லஸ்ஸி, பழச்சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பருகலாம்.
- நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழ வகைகளான தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு பழம், திராட்சை, அன்னாசி, வெள்ளரி, கீரைகள் மற்றும் காய்கறிகளை உண்ணலாம்.
- பள்ளிகளில் தேவையான ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் மற்றும் முதலுதவி பெட்டகத்தினை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
- மாணவர்கள் உள்ளரங்க விளையாட்டுகளான சதுரங்கம், கேரம் போன்ற விளையாட்டுகளை மட்டும் விளையாட வாய்ப்பளிக்கலாம்.
அதிக வெப்ப சலனத்தை தவிர்ப்பதற்கான அறிவுரைகள் - எந்நேரம் யார் வேண்டுமானாலும் வெப்ப நெருக்கடி மற்றும் வெப்ப சலனம் சார்ந்த சூழலுக்கு ஆட்படலாம்.
- எனவே, பச்சிளம் குழந்தைகள், சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், திறந்தவெளியில் பணி புரியும் நபர்கள், மனநல பாதிப்பிற்கு ஆளான நபர்கள், உடல் நலமற்றவர்கள் குறிப்பாக இதய நோய் மற்றும் மிகை ரத்த அழுத்தம் உடையவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
- குளிர் பிரதேசங்களில் இருந்து வெப்ப பிரதேசத்திற்கு இடம் பெயர்பவர்களுக்கு உடலானது காலநிலை இணக்கம் கொள்ள ஒரு வார காலமாவது எடுத்துக் கொள்ளும். எனவே அவர்கள் அதிகமான நீர் பருக வேண்டும்.
பெற்றோர்களுக்கான அறிவுரைகள்
- வீட்டில் இருக்கும்போதும், வெளியில் செல்லும்போதும் வெளிர் நிறம் கொண்ட மெல்லிய, தளர்வான, பருத்தியினால் ஆன ஆடைகளை அணிய வேண்டும்.
- நேரடி சூரிய ஒளியின் தாக்கம் மற்றும் வெப்ப சலனத்தை தடுக்க வீட்டின் சூரிய ஒளிபடும் பக்கங்களில் பகல் பொழுதில் ஜன்னல்களை திரைக் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
- இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீட்டிற்குள் உள்நுழைய ஜன்னல்களை திறந்து வைக்கலாம்.
- உடலை குளிர்விப்பதற்காக மின்விசிறி மற்றும் ஈரத்துணிகளை பயன்படுத்த வேண்டும்.
- உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள 20 நிமிடத்திற்கு ஒரு முறை நீரைப் பருக வேண்டும்.
- தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் எவருக்கேனும் வந்தால் குடிநீர் கொடுத்து தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
செய்யக்கூடாதவை - வெய்யிலின் போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
- வெய்யிலின் தாக்கம் அதிகமுள்ள மதிய வேளையில் கடினமான வேலைகளை செய்தல் கூடாது.
- உச்சி வெயிலின் போது சமைத்தல் கூடாது. சமையல் அறை அமைந்துள்ள பகுதியை காற்றோட்டம் இன்றி வைத்திடல் கூடாது.
- காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள், அதிகமான சர்க்கரை அளவு கொண்ட பானங்களை பருகக் கூடாது.
- அதிக அளவு புரத உணவு மற்றும் கெட்டுப்போன உணவை சாப்பிடக் கூடாது" என்று அந்த அறிக்கையில் பள்ளி கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.

