ஒரு மாசம் ஆகிடுச்சு.. நம் கவனத்திற்கு தகுதியானவர்கள் யார்? மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து கமல் கருத்து..

 
கமல் ஹாசன்

தேசத்தின் பெருமைக்காக விளையாடுவதற்கு பதிலாக  மல்யுத்த வீரர்களை தனிப்பட்ட பாதுகாப்பிற்காக போராட வைத்துவிட்டோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த பயிற்சி பெறும் மைனர் வீராங்கனைகளை  பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக  குற்றச்சாட்டு எழுந்தது. அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.   ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்நிலையில் மீண்டும்  கடந்த ஒரு மாதமாக  வீரர் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  மல்யுத்த வீரர் வீராங்கனைகள்

வீரர்களின் போராட்டத்திற்கு கபில் தேவ், நீரஜ் சோப்ரா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பிரிட்ஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதே தவிர இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. ஆகையால் மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், “மல்யுத்த சகோதரத்துவத்தின் விளையாட்டு வீரர்களின் போராட்டம் இன்று 1 மாதத்தை எட்டியிருக்கிறது.  தேசப் பெருமைக்காகப் போராடுவதற்குப் பதிலாக, தனிப்பட்ட பாதுகாப்பிற்காகப் போராடும்படி அவர்களை நிர்ப்பந்தித்துள்ளோம். சக இந்தியர்களே, நமது கவனத்திற்கு தகுதியானவர் யார், நமது தேசிய விளையாட்டு சின்னங்களா?  அல்லது ஒரு விரிவான குற்ற வரலாற்றைக் கொண்ட அரசியல்வாதியா?” என்று குறிப்பிட்டுள்ளார்.