பெரும் சோகம்..! பள்ளி வேன் மோதி 3ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..!

 
1

சேலம் மாவட்டம் ஏற்காடு வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் மேனகா (வயது 8), ஏற்காடு முண்டகம் பாடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மலைப்பகுதி என்பதால் மாணவர்களை பள்ளிக்கு கூட்டி சென்றுவர தனியார் வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த வேன் தினந்தோறும், ஏற்காடு லேடீஸ் சீட் என்ற பகுதிக்குச் சென்று அங்கு குழந்தைகளை இறக்கி, அங்கிருந்து மற்றொரு வேனில் ஏற்றி பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்த தனியார் வேன் மூலம் சிறுமி மேனகா தினமும் தனது பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

இன்றும் வழக்கம்போல் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை தனியார் வேன் ஏற்றி சென்றிருக்கிறது. அதில் மேனகாவும் சென்றுள்ளார். லேடீஸ் சீட் பகுதிக்கு சென்ற வேன் அங்கு மாணவிகளை கீழே இறக்கி இருக்கிறது. மேனகாவும் அவர்களுடன் இறங்கி உள்ளார்.

மாணவி மேனகா வேனை விட்டு இறங்குவதை சரியாக கவனிக்காத ஓட்டுநர் ரங்கநாதன், வேனை இயக்கியுள்ளார். இதில், மேனகா வேன் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், அதே இடத்தில் உயிரிழந்தார்.

ஓட்டுநரின் கவனக்குறைவால் வேன் சக்கரத்தில் சிக்கி மாணவி பரிதாபமாக உயிரிழந்த செய்தியை அறிந்த ஊர் பொதுமக்களும், பள்ளி மாணவ மாணவிகளும் சம்பவ இடத்தில் கூடினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஏற்காடு காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் தகவல் அறிந்து சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

அதனைத் தொடர்ந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வு செய்ய ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடற்கூராய்வு முடிந்து சடலமானது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இச்சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டு மாணவி மீது வேனை ஏற்றிய ஓட்டுநர் ரங்கநாதனை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.